பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் அமைந்துள்ள கபடி பஜார் என்னும் இடத்தில், நேற்று முன்தினம் (ஜூன் 12) இரவு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஷாஜிதுல் ஹசன் கூறியதாவது, "மின் சாதனப் பொருள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று குழந்தைகள் உள்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்" என்றார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் ராணுவத்தினர் வெடிகுண்டு தாக்குதல் நடந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டனர். பயங்கரவாதத்தை பறைசாற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க இயலாது என்று காவல் துறை உயர் அலுவலர் எச்சரித்தார்.
கரோனாவால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.