ரோம்: ஐரோப்பாவில் தற்போது வெப்ப அலையின தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்நிலைகள் வறண்ட நிலையில் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, இத்தாலியின் போ நதியில் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. நீர் குறைந்ததால், நதியில் வெடிகுண்டு போன்ற ஒன்று மிதப்பதை கண்ட மீனவர் பார்த்துள்ளார். அதை ஆய்வு செய்ததில், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த வெடிகுண்டு என கண்டறியப்பட்டது.
இத்தாலியின் மாந்துவா நகருக்கு அருகே உள்ள போர்கோ விர்ஜிலியோ என்ற கிராமத்தின் வடக்கு பகுதியில் கடந்த ஜூலை 25ஆம் தேதி அந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அந்த வெடிகுண்டில் எடை 450 கிலோ எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த வெடிகுண்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்று வெடிக்க வைக்கும் பணி நேற்று (ஆக. 7) நடைபெற்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள குவாரிக்கு வெடிகுண்டு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பொறியாளர்கள் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், இது அமெரிக்க நாட்டின் தயாரிப்பு எனவும் 240 கிலோ வெடிமருந்தை கொண்டது எனவும் அவர்கள் தெரிவித்தனர். பின்னர், குவாரியில் அந்த வெடிகுண்டை புதைத்து வைத்து, பாதுகாப்பான முறையில் அது வெடிக்க வைக்கப்பட்டது.
இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 3000 பேர் வெளியேற்றப்பட்டு, வான்வழி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியை சுற்றி சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போர்கோ விர்ஜிலியாவின் மேயர் கூறுகையில்,'முதலில் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டனர். பின்னர், பிரச்சனையின் தீவிரம் கருதி இடத்தைவிட்டு வெளியேற ஒப்புக்கொண்டனர். ஒருவேளை, பொதுமக்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்திருந்தால், இந்த செயலிழப்பு திட்டம் தாமதம் ஆகி இருக்கும்' என்றார்.
இரண்டாம் உலகப்போர் காலகட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட போ நதி, இத்தாலியின் நீளமான நதியாகும். இத்தாலியின் வேளாண்மை உற்பத்திக்கு போ நதி மூன்றில் ஒரு பங்கை வகிக்கிறது. தற்போது, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை அந்த நதி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காசா மீது இஸ்ரேல் வாழ்வழி தாக்குதல் - இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் மற்றொரு தளபதி உயிரிழப்பு!