ஐதராபாத் : ஒரே நேரத்தில் 5 ஆயிரத்து 800 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் வகையில் பிரம்மாண்ட உணவகம் சீனாவில் திறக்கப்பட்டு உள்ளது. சீனாவில் சோங்கிங் அருகே உள்ள மலையில் இந்த உலகின் மிகப் பெரிய உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. உலகின் மிகப் பெரிய உணவகத்தை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர்.
இந்த உணவகத்தில் சுமார் 900 டேபிள்கள் உள்ளதாகவும் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 5 ஆயிரத்து 800 வாடிக்கையாளர்கள் அமர்ந்து இரவு உணவு சாப்பிடலாம் என்று உணவக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த மலை உச்சி உணவகத்தின் உண்மையான பெயர் பிபா யுவான். ஏறத்தாழ 3 ஆயிரத்து 300 சதுர அடி இடத்தில் உருவாக்கப்பட்டு உள்ள உணவகத்தில் தொடக்கத்தில் இருந்து கடைசிக்கு செல்வதற்கே சில நிமிடங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய உணவகம் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ள பிபா யுவான் உணவகத்தில், வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவகத்தை அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.
கோடை காலங்கள் மற்றும் விடுமுறைக் காலங்களில் இங்கு கூட்டம் அலை மோதுவதால் ஒரு இருக்கையை பிடிப்பதற்கே சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு நாளொன்று டன் கணக்கிலான உணவுகள் தயார் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
நூற்றுக்கணக்கான பணியாளர்கள், சமையல்காரர்கள், 25 காசாளர்கள் என ஊழியர்களை கொண்டு 24 மணி நேரமும் இந்த உணவகம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த உணவகத்திற்கு வந்து செல்வதால் அந்த இடமே விழாக் கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கிறது. அதற்கேற்றார் போல் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மலையே பிரகாசமாக காட்சி அளிக்கிறது.
இதையும் படிங்க : வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்ற மின்சார ரயில் என்ஜின்... வைரல் வீடியோவுக்கு இந்திய ரயில்வே விளக்கம்!