பிரான்ஸ்: உலகமெங்கும் திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும் அவற்றில் கேன்ஸ் திரைப்பட விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் தலைமையில் இந்தியக் குழு கலந்துகொண்டுள்ளது.
எல்.முருகன் தலைமையிலான குழுவில் ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்கா, 2017-ம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லர், இந்தி நடிகை ஈஷா குப்தா, மணிப்பூரி நடிகர் கங்காபம் டோம்பா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள அணிவகுப்பில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி - சட்டையில் பங்கேற்றார்.
அதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர், “உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ்ப் பாரம்பரிய அடையாளமான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்.
ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் G20India சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம்” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த சிவப்புக் கம்பள அணிவகுப்பில் அவருடன் தயாரிப்பாளர் குனீத் மோங்காவும் பங்கேற்று இருந்தார். இவர் சமீபத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆவண குறும்படமான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் தயாரிப்பாளர் ஆவார். மேலும் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற ’சூரரைப்போற்று’, விக்கி கௌஷல் நடித்த ’மஸான்’, நவாசுதின் சித்திக் நடித்த ’கேங்ஸ் ஆப் வாசிப்பூர்’ என பல படங்களையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குனீத் மோங்கா தயாரித்து ஆஸ்கர் வென்ற ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படம், தமிழ்நாட்டின் முதுமலை தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு முகாமில் பொம்மன் - பெள்ளி தம்பதியரால் பராமரிக்கப்பட்ட அநாதை குட்டி யானைகள் பற்றிய கதையம்சம் கொண்டதாகும். இந்தப் படம் முதுமலை தெப்பக்காட்டின் அழகையும், பொம்மன் - பெள்ளி தம்பதியரின் இயற்கை சார்ந்த வாழ்க்கையையும், குட்டி யானைகள் மீது அவர்கள் காட்டிய அன்பையும் அப்படியே திரையில் பிரதிபலித்திருந்தது.
இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், குனீத் மோங்கா உடன் 2017ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற மனுஷி சில்லர், இந்தி நடிகை ஈஷா குப்தா, மணிப்பூரி நடிகர் கங்காபம் தொம்பா ஆகியோர் அணிவகுத்து இருந்தனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா தரப்பில் ஆக்ரா, கென்னடி, நெஹெமிச் மற்றும் இஷானவ் ஆகிய 4 திரைப்படங்கள் திரையிட தேர்வாகி உள்ளன.
கேன்ஸ் திரைப்பட விழாவைக் கண்டுகளிக்க நடிகை குஷ்பு, சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் உட்பட பலரும் சென்றுள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெறும் சிவப்புக் கம்பள வரவேற்பு மிகவும் பிரபலமானது. இதில் நடிகர் நடிகைகள் விதவிதமான ஆடைகளை அணிந்து வந்து அணிவகுத்து வருவது வழக்கம் ஆகும்.