நைரோபி: கென்யாவில் கடந்த ஜூலை மாதம் தொலைந்து போன 2 இந்தியர்கள் சிறப்புப்படை காவலர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ருடோவின் உதவியாளர் டென்னிஸ் இதும்பி தெரிவித்துள்ளார். பாலாஜி டெலிஃபிலிம்ஸின் முன்னாள் சிஓஓ சுல்ஃபிகர் கான் மற்றும் முகமது சைது சமி கிட்வாய் ஆகிய 2 பேரும் கடந்த ஜூலை மாயமாகினர். இறுதியாக ஓர் பிரபலமான கிளப்பிற்கு அவர்கள் சென்றதாக தகவல் கிடைத்தது.
இவர்கள் இருவரும் அந்நாட்டு அதிபர் வில்லியம் ருடோவின் தேர்தல் பரப்புப்புரை தகவல் தொழில்நுட்ப அணியில் பங்குபெறவிருந்தனர். அதுதொடர்பாக அவரை சந்தித்தப்பின்பே காணாமல் போயினர். இந்த நிலையில், அதிபர் ருடோவின் உதவியாளர் டென்னிஸ் இதும்பி தனது போஸ்புக் பக்கத்தில், "குற்ற விசாரணை இயக்குநரகத்தின் உயரடுக்கு பிரிவை அதிபர் ருடோ கலைத்தார்.
இந்தப் பிரிவு அப்பாவி மக்களை கடத்துவது, கொலை செய்வது, போன்ற செயல்களை செய்து வந்ததால் அந்த முடிவை அவர் எடுத்தார். இதனால் அந்த பிரிவின் சிறப்புப்படை அதிபர் ருடோவின் ஆதரவாளர்களை குறிவைத்து கடத்திவந்தது. அந்த வகையிலேயே சுல்ஃபிகர் கான் மற்றும் முகமது சைது சமி கிட்வாய் கடத்தப்பட்டனர்.
அண்மை தகவலின்படி அவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது" எனப் பதிவிட்டுள்ளார். இதனிடையே தொலைந்து போன 2 இந்தியர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி அவர்களை மீட்க கென்யா அரசிடம் இந்தியத் தூதரகம் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மன்னர் 3ஆம் சார்லஸ் உடனான சந்திப்புக்கு பிறகு இங்கிலாந்தின் பிரதமராகிறார் ரிஷி சுனக்