வாஷிங்டன்: 'பல்பு ஃபிக்ஷன்', 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' போன்ற படங்களை இயக்கிய ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் குவென்டின் டரான்டினோ சமீபத்திய வெரைட்டி எனப்படும் தனியார் மேகஸினின் ,'2 Bears, 1 Cave' போட்கேஸ்ட் நேர்காணலின் போது, மார்வெலில் நடிப்பவர்கள் சினிமா நட்சத்திரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் நேர்காணலில் பேசிய ஹாலிவுட் இயக்குநர் குவென்டின் டரான்டினோ, "ஹாலிவுட்டின் மார்வெல் படங்களில் வரும் கதாபாத்திரங்களில் பிரபலமான நடிகர்கள் நடித்து உள்ளனர். ஆனால், அவர்கள் சினிமா நட்சத்திரங்கள் அல்ல. சரியா?
ஆனால், கேப்டன் அமெரிக்கா அல்லது தோர் கதாப்பாத்திரங்கள் ஒரு ஸ்டார். அதாவது, இதைச் சொன்ன முதல் நபர் நான் அல்ல. இது ஒரு மில்லியன் முறை முன்னரே சொல்லப்பட்டதாக நினைக்கிறேன்” என்றார்.
மேலும் நேர்காணலில் டரான்டினோ கூறுகையில், மார்வெல் திரைப்படங்களை தான் "வெறுக்கவில்லை" என்றும்; அதே நேரம் மார்வெல் சார்ந்த படங்களை மட்டுமே ஹாலிவுட்டில் எடுப்பதாகத் தெரிகிறது. அதனால், அந்த அணுகுமுறையினை விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ”நான் சிறுவயதில் பைத்தியம் போல் மார்வெல் காமிக்ஸை சேகரிப்பேன். என் இருபது வயதில் இந்தப் படங்கள் வெளிவருவதாக இருந்தால், நான் முற்றிலும் மகிழ்ச்சியாக இருப்பேன். முற்றிலும் நேசிப்பேன். ஆனால், உங்களுக்குத் தெரியும், எனக்கு கிட்டத்தட்ட 60 வயதாகிறது. அதனால், நான் அதை விரும்பவில்லை.
ஹாலிவுட்டில் அவை மட்டுமே தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது. அவற்றை உருவாக்கும் ஸ்டுடியோவே அவர்களை தனது ரசிகர்களாக வைக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது" என்று கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில், இயக்குநர் டரான்டினோவிடம், ஒரு மார்வெல் திரைப்படத்தை இயக்கக்கோரி கேட்கப்பட்டபோது அதை மறுத்தார். ஏனெனில் "அதைச் செய்ய நீங்கள் கூலி வேலை செய்பவராக இருக்க வேண்டும். நான் கூலிக்காரன் அல்ல. நான் வேலை தேடவில்லை," என்று அவர் தெரிவித்ததாக வெரைட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாயகன் மீண்டும் வரார்... டெட்பூல் 3 படத்தில் இணைந்த வல்வுரின்