வெலிங்டன்: துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,000-ஐ கடந்துள்ளது. இருநாடுகளிலும் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளதால் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏராளமானோர் வீடுகளை இழந்து நிர்கதியாகி உள்ளனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்படும் காட்சிகளும் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்நிலையில் நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே கேப்ரியல் புயலால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பல இடங்களை வெள்ளம் சூழ்ந்த நிலையில், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கிடையே, பாராபரமுவில் இருந்து வடமேற்கில் 50 கி.மீ., தொலைவில் 57 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக, புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 15 நிமிடங்களுக்குள் 31,000 பேர் நில அதிர்வை உணர்ந்ததாகவும், 10 முதல் 20 விநாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. ஏற்கனவே வெள்ளப்பாதிப்பால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மக்களை மேலும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: Godavari Express: கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து!