கொழும்பு: கரோனாவுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார சரிவு மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு, சுற்றுலா பயணிகளின் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் வரலாறு காணாத அளவு நெருக்கடி ஏற்பட்டன. ஆளும் ராஜபக்சே தலைமையிலான அரசு தான் இந்த சூழ்நிலைக்கு காரணம் என குற்றஞ்சாட்டிய மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, குண்டர்களை கொண்டு தாக்கி அரசு விரட்டியது. அதுவரை அமைதியாக சென்று கொண்டு இருந்த மக்கள் போராட்டம் கலவரத்தை கண்டது. வீதிகளில் இறங்கி போராடி வந்த மக்கள் ஆட்சியாளர்கள் வீடுகளில் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
அமைச்சர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. மக்கள் கொந்தளிப்பை அடுத்து ராஜபக்சே குடும்பத்தினருடன் நாட்டை விட்டு தப்பி வெளி நாட்டிற்கு சென்றார். மக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு நாட்டை மீண்டும் செம்மையாக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இருப்பினும் நாட்டில் எரிபொருள், உணவு, மருந்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு கடுமையாக நிலவியது. விண்ணை முட்டும் அளவுக்கு இருந்த அத்தியாவசிய பொருட்களிம் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்தியா தரப்பில் இலங்கைக்கு 377 மில்லியன் டாலருக்கு மேல் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு தரப்பிலும் அரிசி, மளிகை பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குள்ள தூதரகம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் ஏறத்தாழ 24 ஆயிரம் கோடி ரூபாய் ) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்து அறிவித்து உள்ளது. முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்றும். 2027 ஆம் ஆண்டு வரை பல தவணைகளாக கடன் உதவி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை கொண்டு நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான எரிபொருள் தட்டுபாட்டை தீர்க்க அரசு திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் இலங்கையில் எரிபொருள் விலை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு வகையான பெட்ரோல் மற்றும் டீசல் 8 முதல் 26 சதவீதம் வரை விலை குறைக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு மின் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சானா விஜயசேகரா தெரிவித்து உள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க அமெரிக்கா, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் நிலையங்கள் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு உள்ளூர் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேநேரம் பல்வேறு இடங்களில் இன்னமும் எரிபொருள் தட்டுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் - என்ன காரணம்?