கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். கடந்த 9ஆம் தேதி, கொழும்பில் உள்ள அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் கோத்தபய ராஜபக்ச தலைமறைவாகிவிட்ட நிலையில், தற்போது லட்சக்கணக்கான மக்கள், அதிபர் மாளிகையில் முகாமிட்டுள்ளனர்.
அவர்கள் அதிபர் மாளிகையை சுற்றுலாத்தலமாக மாற்றிவிட்டனர். மாளிகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், படுக்கையறைகள் உள்ளிட்டவற்றை உற்சாகத்துடன் அனுபவித்து மகிழ்கின்றனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுற்றுலா வந்தது போல, கூட்டம் கூட்டமாக நீச்சல் குளத்தில் குளித்தும், புல்வெளிகளில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டும் மகிழ்ந்தனர்.
அதேநேரம் அங்கிருந்த ஏராளமான மக்கள் கோத்தபய ராஜபக்சவுக்கு கண்டனம் தெரிவித்தனர். உணவுக்கு கூட மக்கள் சிரமப்பட்டு போராடிக் கொண்டிருந்த வேளையில், அரசியல் தலைவர்கள் மக்களது வரிப்பணத்தில் இவ்வளவு பெரிய மாளிகையில் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்துள்ளனர் என்பதை பார்க்க முடிகிறது என குற்றம் சாட்டினர். அதிபர் முன்கூட்டியே ராஜினாமா செய்திருந்தால் அதிபர் மாளிகைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:இலங்கை : தப்ப முயன்ற பசில் ராஜபக்சே - சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்!