மாட்ரிட் (ஸ்பெயின்): இந்திய தலைநகரான டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் (செப். 9,10) ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ள நிலையில், மாநாட்டிற்கான பல்வேறு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளனது.
மேலும், இந்த மாநாட்டில் வெளிநாடுகளை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதால், நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, இந்திய விமான படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உட்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று (செப்.7) வியாழக்கிழமை ஸ்பெயின் அதிபர் (Spain President) பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என x தளத்தில் (ட்விட்டர்) பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ இன்று மதியம் (நேற்று) எனக்கு கோவிட்-19 (COVID-19) தொற்று உறுதியாகி உள்ளது. எனவே என்னால் டெல்லிக்கு சென்று, ஜி-20 மாநட்டில் கலந்து கொள்ள முடியாது. நான் நன்றாக இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 மாநட்டில், ஸ்பெயினின் முதல் துணை அதிபர் நதியா கால்வினோ ஸ்பெயின் சார்பாக பிரதிநிதித்துவப்படுத்துவார் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோவிட்-19 பரிசோதனை செய்ததில் அவருக்கு கோவிட் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, அவரது மனைவி ஜில் பைடனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இன்று (செப்.8) அவர் இந்தியா வந்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், உலகின் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் முனைப்புடன் டெல்லி வந்து கொண்டு இருக்கும் சூழலில் சீனா அதிபர் ஜின்பிங், ரஷ்யா அதிபர் புதின் ஆகியோர் இந்த மாநாட்டை புறக்கணித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவில் நடைபெறும் இந்த மாநட்டில் ரஷ்யா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கலந்துகொள்ள உள்ளதாகவும், சீனா சார்பில் பிரதமர் லீ கியாங் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் புறக்கணிப்பைத் தொடர்ந்து, தற்போது ஸ்பெயின் அதிபரின் இந்த வருகை தவிர்ப்பு பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Actor Marimuthu : குணசித்திர நடிகர் மாரிமுத்து மறைவு! திடீர் மாரடைப்பால் மறைவு எனத் தகவல்!