சான் பிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் கடந்த ஆண்டு பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அதன் பிறகு, எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். முன்னறிவிப்பு இல்லாமல் ட்விட்டரின் தலைமை நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களை கூண்டோடு பணிநீக்கம் செய்தார். அதேபோல், அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என்பதை குறிக்கும் ப்ளூ டிக்கிற்கு சந்தா செலுத்துவதை கட்டாயமாக்கினார். எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைகளால் ட்விட்டர் பயனர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர். இந்த சூழலைப் பயன்படுத்தி ட்விட்டருக்கு போட்டியாளர்கள் உருவானாலும், எலான் மஸ்க் ட்விட்டரில் மாற்றங்கள் செய்வதை நிறுத்தியபாடில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரின் லோகோ மற்றும் பெயரை மாற்றினார். ட்விட்டரின் 'நீலக்குருவி' லோகோவை மாற்றவிட்டு 'X' என்ற லோகோவை அறிமுகப்படுத்தினார். அதேபோல், பெயரையும் எக்ஸ் என்று மாற்றினார். ட்விட்டரை ரீ-பிராண்டிங் செய்வதற்காக மஸ்க் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
இந்த புதிய லோகோவை அறிமுகப்படுத்தியதும், அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டரின் தலைமையக கட்டடத்தின் சுவர் மீது X லோகோ ஒளிர வைக்கப்பட்டது. அதேபோல், கடந்த 28ஆம் தேதி தலைமையகக் கட்டடத்தின் உச்சியில் ராட்சத ஒளிரும் X லோகோ நிறுவப்பட்டுள்ளது. இரவு முழுவதும் ஒளிரும் வகையில் இந்த பிரமாண்ட லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லோகோ சான் பிரான்சிஸ்கோ நகரில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரம், உரிய அனுமதியின்றி இந்த லோகோ நிறுவப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ட்விட்டரின் தலைமையக கட்டடத்தின் உச்சியில் நிறுவப்பட்டுள்ள இந்த எக்ஸ் லோகோ தங்களுக்கு இடையூறாக இருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரவு முழுவதும் இந்த லோகோவிலிருந்து வெளியாகும் அடர்த்தியான ஒளியால் தூங்க முடியவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். இந்த லோகோவின் வெளிச்சத்திலிருந்து தப்பிக்க ஜன்னல் திரை மறைப்புகளை வாங்கியுள்ளதாகவும் தலைமையகத்திற்கு அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர்கள் தங்களது ட்விட்டர் தளத்திலேயே வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில், ட்விட்டரின் தலைமையகத்தை சான் பிரான்சிஸ்கோ நகரை விட்டு மாற்றப்போவதில்லை என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ட்விட்டரின் தலைமையகத்தை சான் பிரான்சிஸ்கோ நகரை விட்டு வெளியே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனப் பலரும் முயற்சித்து வருவதாகவும், பலரும் அதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், தாங்கள் சான் பிரான்சிஸ்கோ நகரை விட்டு வெளியேற மாட்டோம் என்றும், சான் பிரான்சிஸ்கோவை கைவிட மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ட்விட்டர் தலைமையகத்தில் 'X' லோகோ: அனுமதி மீறல் குறித்து விசாரணை!