லண்டன்: இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே, அந்நாட்டின் பிரதமராக பதவி வகிக்க முடியும் என்பது விதி. இதனிடையே பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டண்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரிஷி சுனக் (42) கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரானர்.
அந்த வகையில் கட்சியின் விதிப்படி, இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்க உள்ளது இதுவே முதல்முறை ஆகும். இவருக்கு பிரதமர் மோடி உள்பட உலக அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெளியேறும் பிரதமர் லிஸ் ட்ரஸ் இன்று (அக் 25) காலை, 10 டவுனிங் வீதியில் தனது இறுதி அமைச்சரவைக்கு தலைமை தாங்க உள்ளார். முன்னதாக பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்லும் லிஸ் ட்ரஸ், தனது ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸிடம் வழங்குவார்.
இதனையடுத்து மன்னர் மூன்றாம் சார்லஸை இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக் சந்திக்க உள்ளார். தொடர்ந்து ரிஷி சுனக், இங்கிலாந்தின் பிரதமராக மன்னரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். இந்த நிகழ்வில் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி, மகள்கள் கிருஷ்ணா மற்றும் அனவுஷ்கா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக இவர் இங்கிலாந்தின் நிதி அமைச்சராக செயல்பட்டார். மேலும் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்க உள்ள ரிஷி சுனக், முண்ணனி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 200 ஆண்டுகால இங்கிலாந்து சரித்திரத்தில் இளம்பிரதமராகும் ரிஷி சுனக் கடந்து வந்த பாதை!