போஸ்டன் : நீரில் மூழ்கி நூற்றாண்டுகள் கடந்த டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்களை காணச் சென்ற 5 கோடீஸ்வரர்களின் நீர்மூழ்கிக் கப்பல் மாயமான நிலையில், அவர்களை தேடும் இறுதி கட்ட பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
நீரில் மூழ்கி 110 ஆண்டுகள் கடந்த டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்களை காண பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 5 தொழிலதிபர்கள், ஆழ்கடல் சுற்றுலா நிறுவனமான ஓசன்கேட்டின் நீர்மூழ்கி கப்பலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த நீர்மூழ்கி கப்பலில் சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆழ்கடலுக்கு சென்ற சிறிது நேரத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது. எலான் மஸ்க்கின் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிக்கின் இணையத்தில் இயங்கிக் கொண்டு இருந்த நீர்மூழ்கிக் கப்பல் திடீரென காணாமல் போனது. காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை, கனடா ராணுவ விமானங்கள், பிரான்ஸ் கடற்படை கப்பல்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நீர்மூழ்கிக் கப்பலில் சிறிது நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவசரகால தேவைகளுக்காக நான்கு நாட்களுக்கு பயன்படுத்தப்படும் வகையில் ஆக்சிஜன் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீர்மூழ்கிக் கப்பலில் சேமிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு நாட்களுக்கும் மேலாக நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
நீர்மூழ்கிக் கப்பலில் வியாழக்கிழமையுடன் (ஜூன். 22) ஆக்சிஜன் தீர்ந்து விடும் என்று கூறப்படும் நிலையில், மாயமானவர்களை தேடும் இறுதிக் கட்ட முயற்சியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். கடைசி நாளில் கூடுதல் கப்பல்கள், ரோந்து படகுகள், தொலைதூர வழிகாட்டு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
கடைசியாக சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், நீர்மூழ்கிக் கப்பல் எந்த திசையில் சென்றது என்பதை கண்டறிவது சவாலாக இருப்பதாக மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவு கனக்டிக்கெட் மாகாணத்தின் இருந்து 12 ஆயிரத்து 200 அடி தூரம் கடல் பரப்பில் தேடுதல் பணி நடைபெற்று முடிந்த நிலையில், நீர்மூழ்கிக் கப்பலை கண்டறிய முடியவில்லை என அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆழ்கடலில் உயிருக்காக இறுதி மூச்சுடன் போராடி வரும் 5 கோடீஸ்வரர்களை மீட்கும் பணி அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 46 பேர் வரை டைட்டானிக் சுற்றுப் பயணத்தை ஓசேன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் வெற்றிகரமாக சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிரதமர் மோடிக்கான விருந்தில் இதுதான் ஸ்பெஷல் - ஜில் பைடன் தயாரித்த சூப்பர் மெனு!