ஜகார்த்தா: இந்தோனேசியாவின் டானிமர் பகுதியில் நள்ளிரவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துவால் தீவுக் கூட்டங்களில் இருந்து தென்மேற்கே 342 கிலோமீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி 2:47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஆஸ்திரேலியா வரை உணரப்பட்டுள்ளது. மொத்தமாக 1.4 கோடி மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின் 3 மணி நேரத்துக்குப்பின் எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது.
நள்ளிரவில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல பகுதிகளில் உள்ள வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அதேபோல நிலநடுக்கத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. பசிபிக் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் அதிக கடல் எரிமலைகள் கொண்ட பகுதிகளில் இந்தோனேசியாவின் தீவுகள் அமைந்துள்ளதால் நிலநடுக்கங்கள் வாடிக்கையாகிவிட்டன. உலகின் பெரும்பாலான உயிருள்ள எரிமலைகள் இங்குள்ளன.
இதையும் படிங்க: பூமியில் விழப்போகும் நாசா செயற்கைகோள் - இந்தியாவுக்கு பாதிப்பா..?