இஸ்லாமாபாத் : கண்டம் தாண்டி தாக்கும் கவுரி பாலிஸ்டிக் வகை ஏவுகணை பயிற்சி சோதனையில் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை சோதனை முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கவுரி பாலிஸ்டிக் ஏவுகணை பயிற்சி சோதனையை வெற்றிகரமாக செலுத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தொழில்நுட்பம் மற்றும் செயலாக்கத்தின் தயார் நிலை குறித்து ஆராய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அண்மையில் அபபீல் ஆயுத அமைப்பின் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக பாகிஸ்தன் ராணுவம் மேற்கொண்டு இருந்தது. சரியாக ஒரு வார இடைவெளியில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கவுரி ஆயுத அமைப்புக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வந்த சீனாவின் மூன்று நிறுவனங்களுக்கு அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்தது.
இருப்பினும் கவுரி ஆயுத அமைப்பின் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆயுத சப்ளையில் பாகிஸ்தானுக்கு முக்கிய கூட்டாளி நாடாக சீனா விளங்குகிறது. பாகிஸ்தான் ராணுவத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு சீனா பல்வேறு ஆயுதங்களை வழங்கி தொடர்ந்து உதவி வருகிறது.
ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி, உள்துறை அமைச்சர் அன்வாருள் ஹக் கக்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதேநேரம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாகிஸ்தான், ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு இருப்பது பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனம் 77 விமானங்களின் சேவையை ரத்து செய்து உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ஒடிசா கேபினட் அமைச்சரான தமிழக அதிகாரி... யார் இந்த வி.கே.பாண்டியன்! ஐ.ஏ.எஸ் அதிகாரி - அரசியல்வாதி!