இஸ்லாமாபாத்: 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டது.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பலரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தனர். 20க்கும் மேற்பட்ட இந்த வழக்குகளை ஒரே வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள், சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரிக்கத் துவங்கியது.
இந்த வழக்கின் விசாரணை 16 நாட்கள் நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் (டிச.11) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லும் எனவும், அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தி, முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனவும், லடாக் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கு ஆதரவு ஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கம் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 தொடர்பாக, இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மேலும் சிக்கலாகும் என தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாக அவருடைய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாஃப் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது, “இந்திய உச்ச நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய மற்றும் சட்டத்திற்குப் புறம்பான தீர்ப்பு, பல தசாப்தங்களாக நீடித்து வரும் மோதலைத் தீர்க்க உதவுவதற்குப் பதிலாக, காஷ்மீர் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்.
இது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை (UNSC) மீறுவதாகும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் காஷ்மீர் மக்களுக்கு தங்களின் தார்மீக ஆதரவு எப்போதும் இருக்கும். தங்களினுடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுத்த முயன்றோம். ஆனால், ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு அது முடியாமல் போய்விட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரம்..