நியூ யார்க் : இந்தியாவில் இருந்து கடத்தி அமெரிக்காவில் விற்கப்பட்ட 15 பழங்கால கலை பொருட்களை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைக்க உள்ளதாக நியூ யார்க் கலைப் பொருள் அருங்காட்சியகம் தெரிவித்து உள்ளது. இந்த 15 பழங்கால கலைப் பொருட்களும் கிமு 1 நூற்றாண்டு முதல் கிபி 15 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நியூ யார்க் கலைப் பொருள் அருங்காட்சியகம் திருப்பித் தருவதாக அறிவித்து உள்ள 15 பொருட்களும் சுடுமண், செம்பு, கற்கள் உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்டவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக கடத்தப்படும் கலை பொருட்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படுகின்றன.
இந்த பழங்கால பொருட்களை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் இந்தியாவில் இருந்து கடத்தி அமெரிக்காவில் விற்றது தெரிய வந்து உள்ளது. சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புடைய சிலைகளை பல நாடுகளில் இருந்து கடத்தி விற்பனை செய்த விவகாரத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்தும், இன்டர்போல் உதவியுடனும் சுபாஷ் கபூரை கைது செய்து தமிழ்நாடு அழைத்து வந்தனர்.
சுபாஷ் கபூர் மீது 5 சிலை கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த பத்து வருடமாக சிறையில் உள்ள சுபாஷ் கபூர் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அவர் மீது சிலை கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கப்பட்ட பழங்கால பொருட்கள் கடத்தப்பட்டவை என அறிந்த நிலையில், மான்ஹட்டம் நீதிமன்றத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் ஜெர்மனியிலும் சுபாஷ் கபூருக்கு எதிரான சிலைக் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மான்ஹட்டம் நீதிமன்ற விசாரணையில் கடத்தல் சிலைகள் குறித்த தகவலை அடுத்து 15 கலை பொருட்களையும் இந்தியாவிடம் திருப்பித் தர அருங்காட்சியக நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நியூ யார்க் அருங்காட்சியகம் நிர்வாகம், மான்ஹட்டம் நீதிமன்றத்துடன் இணைந்து சிலைகளை திருப்பித் தர ஒப்பந்தம் செய்து உள்ள நிலையில் விரைவில் இந்தியாவில் இருந்து சுபாஷ் கபூரால் கடத்தி விற்கப்பட்ட 15 பழங்கால கலை பொருட்கள் மீண்டும் இந்தியாவையே வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 2023 -24 நிதி ஆண்டில் மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி வசூல் உயரும் - எஸ்பிஐ-யின் கணிப்பு கூறுவது என்ன?