உலகமே காதலால் இயங்குகிறது. உலகம் முழுதும் பரவும் கதைகளில் காதல் கதைகளுக்கே முன்னுரிமை. திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களே நீங்கா இடத்தைப் பிடிக்கின்றன. இவ்வாறு 1997இல் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள காதலர்களுக்கு உத்வேகத்தை கொடுத்த கற்பனைக் காதல் காவியம்தான் ‘டைட்டானிக்’ என்ற ஹாலிவுட் திரைப்படம். இப்படத்தின் மூலம் ஜாக் என்ற அழகிய இளைஞனாக அறிமுகமாகி ரசிகர்களின் இதயத்தை களவாடிய லியனார்டோ டிகாப்ரியோ தனது 48ஆவது பிறந்த தினத்தை இன்று (நவ-11) கொண்டாடுகிறார்.
உலக அரங்கில் அறியப்பட்ட முகமாகவும், அனைவராலும் விரும்பப்பட்ட முகமாகவும் இருந்த லியனார்டோவின் திரைப் பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. இந்த அங்கீகாரமும் விரைவில் கிடைக்கவில்லை. ஹாலிவுட் படங்கள் என்றாலே சண்டை, ஆக்ஷன் என இந்திய ரசிகர்களின் எண்ணம் இருந்த வேளையில், மூன்று மணி நேரம் அழகான காதல் கதையைக்கூறி உலகம் முழுவதுமான ரசிகர்களை அள்ளியது டைட்டானிக் திரைப்படம். டைட்டானிக் மூலம் உலக ரசிகர்களுக்கு அறிமுகமான டிகாப்ரியோ வாழ்வு முழுதும் பல தடைகளைக் கடந்து முன்னேறி வருகிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் 1974ஆம் ஆண்டு நவம்பர் 11அன்று லியனார்டோ பிறந்தார். இவரது முழுப்பெயர் லியனார்டோ வில்ஹம் டிகாப்ரியோ என்பதாகும். சிறு வயதிலேயே தொலைக்காட்சி தொடர்களில் நடித்த டிகாப்ரியோ தொடர்ந்து பல படங்களில் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்தார். 1993இல் நடித்த What's Eating Gilbert Grape படத்திற்காக ஆஸ்காருக்காக முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டார். 1996இல் ரோமியோ ஜூலியட், 1997இல் டைடானிக் என காதல் கதைகளில் நடித்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அறியப்பட்டார்.
டைட்டானிக்கில் சிக்காத ஆஸ்கார்: டைட்டானிக் படம் ஆஸ்கார் விருதுக்காக பல துறைகளில் பரிந்துரைக்கப்பட்டு 11 விருதுகள் வாங்கியது. இருப்பினும் டிகாப்ரியோவிற்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை. இதனை அன்றைய ஊடகங்கள் டிகாப்ரியோவைத் தவிர, மற்றவர்களுக்கு ஆஸ்கார் என வசைபாடின. இதனையடுத்து ஆஸ்கார் விருதுக்காக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.
22 வருடமாக விடா முயற்சியில் நடிப்பிற்காக மட்டுமே catch me if you can, Aviator, Blood Diomand, wolf of the wall street, ஆகிய படங்களுக்காக 5 முறை ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்படுகிறார். டிகாப்ரியோ வில்லனாக நடித்த படம்தான் ‘ஜாங்கோ’. இந்தப் படத்தில் வரக்கூடிய காட்சி ஒன்றில் மேஜையைத் தட்டி வசனம் பேச வேண்டும். அப்போது, அங்கே இருந்த கண்ணாடி டம்ளரில் தெரியாமல் அடித்ததும் டிகாப்ரியா கையில் ரத்தம் கொட்டியது. ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல் முழுதாய் நடித்துக் கொடுத்தார். இந்தப் படத்துக்கும் அவருக்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை.
இது மாதிரியான தோல்விகளால் மனசு உடைந்த டிகாப்ரியோ ஒரு ஜோதிடரை சந்திக்கச்சென்றார். அப்போது, டிகாப்ரியோவின் பெயரை மாற்றினால், ஆஸ்கார் கிடைக்கும் என்று ஜோதிடர் சொல்லியும், முடியாது என்று மறுத்துவிட்டார்.
பின், ஆஸ்கார் ஆசையை ஒதுக்கிவிட்டு அவரோட நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இப்படி பல ஏற்ற இறக்கங்களுடன் போய்க்கொண்டிருந்த டிகாப்ரியா வாழ்க்கையில் ரிவனன்ட் என்கிற ஒரு படம் கிடைக்கிறது. அதில் நடிக்கும் டிகாப்ரியோ, ஒரு காட்சிக்காக காட்டெருமையின் ஈரலை உண்ணவேண்டும். ஆனால், டிகாப்ரியோவோ சைவம் மட்டுமே சாப்பிடுபவர். இந்நிலையில், கலையின் மீது கொண்ட காதலால், இந்த சீனுக்காக இரண்டு நாள் பட்டினி இருந்ததோடு, உண்மையான காட்டெருமையின் ஈரலை சாப்பிட்டு சீனையும் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். இவ்வளவும் தடைகளையும் தாண்டியதன்பின் தான் ஆஸ்காரை டிகாப்ரியோவால் பெற முடிந்தது.
வாழ்க்கை முழுவதும் பல ஏளனங்களை சுமந்த டிகாப்ரியோவின் திரைப்பயணம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன் உதாரணம். இத்தகைய லியனார்டோ டிகாப்ரியோ 48ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். மேலும் இவர் பல எல்லைகளைக் கடந்து ஹாலிவுட் திரையுலகில் நீங்கா நாயகனாக ஜொலிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இதையும் படிங்க:"அவதார்-2 படத்தின் நீளம் பற்றி கவலை வேண்டாம்" - இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்!