ரஃபா: காசா பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் தரைவழித் தாக்குதல் நடவடிக்கையின்போது, மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் தவறுதலாக கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் இராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, இஸ்ரேலிய ராணுவத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை ஆபத்தானவர்கள் என்று நினைத்து, தவறுதலாக அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அவர்கள் தப்பித்து வந்தவர்களா அல்லது கைவிடப்பட்டவர்களா என்பது தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவம், காசாவில் உள்ள ஷிஜாயாவில் நடந்துள்ளது. இப்பகுதியில்தான் அண்மைக் காலமாக, ஹமாஸ் படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பாலஸ்தீன அதிபர் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்து, காசாவில் போருக்கு பிந்தைய ஏற்பாடுகளைக் குறித்து விவாதித்துள்ளார்.
மேலும், காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதப் படையினர்களை முழுமையாக அழிக்கும் வரை, தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் - பாலஸ்தீன போர்; ஐநாவின் உடனடி மனிதாபிமான போர் நிறுத்த வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு!
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் துவங்கப்பட்ட இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிலவும் போரில், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட இதுவரை 18 ஆயிரத்து 700 பேர் மரணமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று (டிச.15) காசாவின் கான் யூனிஸ் பகுதியில் நடந்த இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலின்போது, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் மைதானத்தில் இருந்து செய்தி வழங்கிக் கொண்டிருந்த அல்-ஜஜீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் கட்டுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். அதில் பாலஸ்தீன் பகுதியைச் சார்ந்த ஒளிப்பதிவாளர் சமீர் அபுதக்கா சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.
அவருடன் செய்தி வழங்கிக் கொண்டிருந்த, அல்-ஜஜீரா செய்தி நிறுவனத்தின் காசா பகுதிக்கான தலைமைச் செய்தியாளர் வாயில் தாவூத் படுகாயம் அடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில்-ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது.
மரணமடைந்தவர்களுள் 56 பேர் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 4 பேர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் லெபனான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர்கள் என பத்திரிகையாளர்கள் பாதுகாப்பிற்காக இயங்கும் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் பைடனின் இந்தியா பயணம் ரத்து? என்ன காரணம்?