ஜெருசலேம்: கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர், எல்லையைத் தாண்டி தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், 240 இஸ்ரேலிய குடிமக்களை ஹமாஸ் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த ஆறு வாரமாக இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தற்போது இஸ்ரேல் அமைச்சரவை ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பிற்காக செவ்வாய்கிழமை பிற்பகல் கூடிய இஸ்ரேல் அமைச்சரவை கூட்டம், புதன்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் காசா பகுதியில் உள்ள 240 பணயக் கைதிகளில் 50 பேரை நான்கு நாட்களுக்குள் விடுவிக்கும் என்று இஸ்ரேலிய அரசு தெரிவித்தது.
இதையும் படிங்க: இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 13,000 ஆக உயர்வு..!
இந்த நான்கு நாட்களில் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, காசா பகுதியில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளுக்கு ஈடாக, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன பணயக் கைதிகளை விடுவிப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும், விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணயக் கைதிகளுக்கும் ஒரு கூடுதல் நாள் அமைதியை நீட்டிப்பதாக இஸ்ரேல் கூறியது. முதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹமாஸின் இராணுவத் திறன்களை அழித்து, இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரையும் திருப்பி அனுப்பும் வரை போரைத் தொடரப் போவதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. புதன்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவை வாக்கெடுப்புக்கு முன்னதாக பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான பிறகு மீண்டும் ஹமாஸூக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கும்.
போர் நிறுத்தம் எப்போது அமலுக்கு வரும் என்பது உடனடியாகத் தெரியவில்லை. நாங்கள் போரில் இருக்கிறோம், நாங்கள் போரைத் தொடர்வோம். எங்கள் எல்லா இலக்குகளையும் அடையும் வரை நாங்கள் தொடருவோம்” என கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் போதும் உளவுத்துறை செயல்படும் எனவும், அடுத்த கட்ட போருக்கு இராணுவம் தயாராக உள்ளதாகவும் நெதன்யாகு கூறினார். காசா இஸ்ரேலை அச்சுறுத்தும் வரை போர் தொடரும் என அவர் கூறினார்.