வாஷிங்க்டன்: நியூஜெர்சியில் நடைபெற்ற வருடாந்திரப்போட்டியில் வெர்ஜீனியாவைச்சேர்ந்த இந்திய அமெரிக்க இளம்பெண் ஆர்யா வால்வேகர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ 2022 என்ற பட்டத்தை வென்றுள்ளார். இவருக்கு 18 வயதாகிது. இது குறித்து ஆர்யா கூறுகையில், ''என்னை வெள்ளித்திரையில் பார்க்க வேண்டும் என்பதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றவேண்டும் என்பதும் எனது சிறுவயது கனவு" என்று கூறினார்.
மேலும் ஆர்யாவிற்கு புதிய இடங்களைத்தேடிப் பயணம் செல்வது, சமைப்பது மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற பொழுதுபோக்குகள் இருப்பதாகக் கூறினார். இதனைத்தொடரந்து வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மருத்துவப்படிப்பு மாணவி சௌமியா ஷர்மா முதல் ரன்னர் அப் ஆகவும், நியூ ஜெர்சியைச் சேர்ந்த சஞ்சனா செகுரி இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தப்போட்டி நீண்ட காலமாக நடைபெறும் இந்தியப்போட்டி ஆகும். கடந்த 40 ஆண்டுகளாக இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. இது நியூயார்க்கில் வசிக்கும் இந்திய அமெரிக்கர்களான தர்மாத்மா மற்றும் நீலம் சரண் ஆகியோரால் தொடங்கப்பட்டது. உலகளாவிய போட்டிகளின் நிறுவனர் மற்றும் தலைவர் தர்மாத்மா சரண் பேசுகையில், "பல ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகத்தினர் தரும் ஆதரவிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று கூறினார். வாஷிங்டன் மாநிலத்தைச்சேர்ந்த அக்ஷி ஜெயின் ’மிஸஸ் இந்தியா யுஎஸ்ஏ’வாகவும், நியூயார்க்கைச்சேர்ந்த தன்வி குரோவர் ’மிஸ் டீன் இந்தியா யுஎஸ்ஏ’வாகவும் பட்டம் சூட்டப்பட்டனர்.
மிஸ் இந்தியா யுஎஸ்ஏ, மிஸஸ் இந்தியா யுஎஸ்ஏ மற்றும் மிஸ் டீன் இந்தியா யுஎஸ்ஏ ஆகிய மூன்று வெவ்வேறு போட்டிகளில் 30 மாநிலங்களைச்சேர்ந்த 74 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெறுபவர்கள் அதே குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய போட்டிகளில் பங்கேற்க அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மும்பைக்கு அனுப்பப்படுவார்கள். நிகழ்ச்சியில் பாடகி ஷிபானி காஷ்யப், குஷி படேல், (மிஸ் இந்தியா 2022) மற்றும் ஸ்வாதி விமல் (மிஸஸ் இந்தியா வேர்ல்டுவைட்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஃபெமினா மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்ற கர்நாடகாவின் ஷினி ஷெட்டி!