இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார சீர்கேடு, பணவீக்கம், விலை வாசி உயர்வு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதனிடையே இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மார்ச் 28ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன.
இதையடுத்து இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு அளித்த ஆதரவை எம்கியூஎம் (முத்தாஹிதா குவாமி இயக்கம்) கட்சி விலக்கிக்கொள்வதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தது.
இதனால், இம்ரான் கான் கட்சி பெரும்பான்மை இழந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக, எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இதில், துணை சபாநாயகரின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது என்று கூறி ரத்து செய்த உச்ச நீதிமன்றம், மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது. அதன்படி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று (ஏப். 9) நடைபெற்றது.
வாக்கெடுப்பிற்கு, இம்ரான் கானின் பிடிஐ கட்சி (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்) உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளாததால், வாக்கெடுப்பு சற்றுநேரம் ஒத்திவைக்கப்பட்டது. வாக்கெடுப்பை தாமதப்படுத்தவே இம்ரான் கான் இதுபோன்று செயல்படுகிறார் என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, தனது அமைச்சரவை கூட்டி இம்ரான் கான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
சபாநாயகர் பதவி விலகல்: இம்ரான் கானுக்கு மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில், 172 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், போதிய ஆதரவு இல்லாததால், வாக்கெடுப்பை ஒட்டுமொத்தமாக தவிர்த்தது. இதனிடையே நாடாளுமன்ற சபாநயகர் ஆசாத் கைசர் பதவி விலகியதால் வாக்கெடுப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சர்தார் அயாஸ் சாதிக் தலைமை தாங்கினார்.
இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக 174 வாக்குகள் பதிவானது. அந்த வகையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் இம்ரான் கான் அரசு கவிழ்க்கப்பட்டது. இதுவரை பாகிஸ்தானில் எந்தவொரு பிரதமரும் தனது ஆட்சிக்காலத்தில் முழுமையாக பதவி வகித்தது இல்லை. ஆனால் முதல்முறையாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவியை பிரதமர் இம்ரான் கான் இழந்ததுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் முடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு.. சிக்ஸர் அடிப்பாரா? டக்அவுட் ஆவாரா இம்ரான் கான்!