ஹைதராபாத்: நமக்கு பிடித்த மற்றும் புதுவிதமான உணவு வகைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் பெருமளவுக்கு அதிகரித்து விட்டது. அதிலும் ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் அளவுக்கு உணவு டெலிவரி நிறுவனங்கள் வேகமாக செயல்படுகின்றன. நிமிடங்களில் பீட்சா, பிரியாணி என எதை வேண்டுமானாலும் ஆர்டர் செய்து விடுகிறோம்.
இதுபோன்ற பரபரப்பான காலகட்டத்தில் ஒரு உணவை ருசிக்க 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ஜப்பானில் டகாசாகோவில் உள்ள அசாஹியா என்ற பாரம்பரியமான கடையில் விற்கப்படும் குரோக்கெட்டுகள் நீங்கள் சாப்பிட விரும்பினால், பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
உருளைக்கிழங்கும், மாட்டிறைச்சியும் கொண்டு இவர்கள் தயாரிக்கும் குரோக்கெட்டுகளுக்கு, இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்தே உள்ளூரில் பெரிய மவுசு உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது குரோக்கெட்டுகளின் புகழ் பிற நாடுகளுக்கும் பரவியது. இதனால், அதிகளவு ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தன. மலை போல குவியும் ஆர்டர்கள் காரணமாகவே டெலிவரிக்கு பல ஆண்டுகள் எடுக்கிறது என்று கூறுகிறார்கள்.
இந்த கடையிலிருந்து அண்மையில் குரோக்கெட்டுகளை பெற்ற ஜப்பானிய பெண்மணி ஒருவர் தனது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2013ஆம் ஆண்டு தான் ஆர்டர் செய்த குரோக்கெட்டுகள் இப்போது கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அந்த குரோக்கெட் கடைக்கு தொடர்ந்து ஆர்டர்கள் குவிந்து வருவதால், தற்போது யாரேனும் ஆர்டர் செய்தால், அதை சாப்பிட சுமார் 30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.