ஜமைக்கா: பிரபல ஓட்டப் பந்தய வீரரான உசேன் போல்ட், ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். ஒலிம்பிக்கில் 8 பதக்கங்கள் உள்பட பல்வேறு உலக சாதனைகளை படைத்த உசேன் போல்ட், 2017ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். இவருடைய வங்கி சேமிப்புக்கணக்கில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் உசேன் போல்ட்டின் வங்கி கணக்கில் இருந்து 103 கோடி ரூபாய் (12.7 மில்லியன் டாலர்) குறைந்துள்ளதாக, அவரது வழக்கறிஞர் பரபரப்பு புகார் ஒன்றை அறிவித்துள்ளார். இதன்படி எந்தவித பணப்பரிவர்த்தனையும் இல்லாமல் 103 கோடி ரூபாய் மாயமாகியுள்ளது. இதுகுறித்து ஜமைக்கா நிதி சேவைகள் ஆணையம் (FSC) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இதுதொடர்பாக ஜமைக்காவின் நிதி அமைச்சர் நிகல் கிளார்க் கூறுகையில், “ஜமைக்காவின் மிகப்பெரிய மோசடியாக இது அமைந்துள்ளது. இதனை விசாரிக்க பிற சர்வதேச உதவிகளையும் நாடியுள்ளோம். இதனால் எப்பிஐ இதனை விசாரிக்க தொடங்கி உள்ளது. கிங்ஸ்டனை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டாக்ஸ் அண்டு செக்யூரிட்டீஸ் மீதான விசாரணையை தொடங்கி உள்ளோம்.
தற்போதுவரை எத்தனை பேரின் வங்கி கணக்கில் இருந்து எவ்வளவு பணம் திருடு போயுள்ளது குறித்த முழுமையான விவரம் பெறப்படவில்லை. இதில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் தேசிய சுகாதார நிதியகம், ஜமைக்காவின் வேளாண்மை சங்கம் மற்றும் தேசிய வாழ்விட அறக்கட்டளை போன்ற நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. எனினும் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்றார்.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக் கூறி ரெய்டு.. ரூ.2 கோடி கொள்ளையடித்த கில்லாடி கொள்ளையர்கள்...