டெக்சாஸ் : தொந்தரவு செய்யும் வகையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருந்ததாக இளைஞரை தட்டிக் கேட்ட குற்றத்திற்கு அமெரிக்கா கிளீவ்லேண்ட் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை, பெண்கள் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் தலைவிரித்து ஆடுகிறது. பொது வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அதனால் பல உயிர்கள் அநாவசியமாக கொல்லப்படுவதும் அமெரிக்காவில் சகஜமான ஒன்றாக காணப்படுகிறது. துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் துப்பாக்கிச் சூடு வன்முறைகளை கட்டுப்படுத்த மாகாண அரசு சட்டம் இயற்றி உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் அண்டை வீட்டில் குடியிருந்த பெண்கள், குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தலைமைறவான நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனது வீட்டில் நின்று கொண்டு இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி தொடர்ச்சியாக சுட்டுக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்டை வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து அண்டை வீட்டில் இருந்தவர்கள் துப்பாக்கி சூட்டை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த இளைஞர் இது என் வீடு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறி மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதன் பின் சிறிது நேரம் கழித்து அண்டை வீட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞர் துப்பாக்கியால் வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளி விட்டு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.
இந்த கோர சம்பவத்தில் 3 பெண்கள், 8 வயது சிறுவன் உட்பட வீட்டில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் 5 பேரின் சடலங்களை கைப்பற்றினர். மேலும் தலைமறைவான இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் மெக்சிகன் நாட்டை சேர்ந்த ஓரோபெஸ் என்று தெரிய வந்ததாகவும் தப்பி தலைமறைவான நபரை தேடும் பணி தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Mann Ki Baat : "மன் கி பாத்" - 100-வது எபிசோடில் உரையாற்றும் பிரதமர் மோடி!