வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள யுசிஎல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் தூங்கும் நேரத்திற்கும், உடலின் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் அறிக்கை பிஎல்ஓஎஸ் (PLOS) மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக 50, 60 மற்றும் 70 வயதுடைய ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ தரவுகளை பகுப்பாய்வு செய்தனர். ஒவ்வொருவரும் சராசரியாக எவ்வளவு நேரம் தூங்கினர், அவர்களுக்கு இருந்த நோய்கள், இறப்புக்கான காரணம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
ஐந்து மணி நேரம் மற்றும் அதற்கு குறைவாக தூங்கியவர்களின் தரவுகளை 7 மணி நேரம் வரை தூங்கியவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். 50 வயதில் ஐந்து மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் தூங்கியவர்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் 20 சதவீதம் அதிகம் என்றும், அவர்களுக்கு 25 ஆண்டுகளில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.
50, 60 மற்றும் 70 வயதில் ஐந்து மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் தூங்கியவர்களுக்கு, 7 மணி நேரம் தூங்கியவர்களைவிட இறப்பு அபாயம் 25 சதவீதம் அதிகம் என தெரியவந்துள்ளது. குறைவாக தூக்கம் என்பது நீரிழிவு நோய், கேன்சர், இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தையும், இறப்பு ஏற்படுவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர் டாக்டர் செவெரின் சபியா கூறுகையில், "அதிக வருமானம் கொண்ட நாடுகளில் மல்டிமார்பிடிட்டி அதிகரித்து வருகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு இப்போது குறைந்தது இரண்டு நாள்பட்ட நோய்கள் உள்ளன. இது பொது சுகாதாரத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் மல்டிமார்பிடிட்டி எனப்படும் பல்நோய் பாதிப்புகள் ஏற்படுவோருக்கு உயர் சுகாதார சேவை தேவைப்படுகிறது. இது நோயாளிகளின் வருவாய் உள்ளிட்ட பல காரணிகளுடன் தொடர்புடையது.
பொதுவாக மக்களுக்கு வயதாகும்போது, அவர்களின் தூங்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அதனால் இரவில் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. அதை விட அதிகமாக தூங்குவது அல்லது குறைவாக தூங்குவது இரண்டுமே வாழ்வியல் நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.
ஆரோக்கியமான இரவு தூக்கத்தை உறுதிப்படுத்த, தூங்குவதற்கு முன்பு படுக்கையறையை அமைதியாகவும், இருட்டாகவும், சரியான வெப்பநிலையிலும் வைத்துக் கொள்ள வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதையும், அதிக உணவு உண்பதையும் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது, சூரிய ஒளியை பெறுவது உள்ளிட்டவை நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
ஆய்வின் ஒரு பகுதியாக, 9 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் தூங்குவதால் உடல் நலனில் ஏற்படும் விளைவுகளையும் மதிப்பீடு செய்தோம். அதில், 50 வயதில் நீண்ட நேரம் தூங்குவதால் பல்நோய்கள் ஏற்படும் ஆபத்து இருக்கிறதா? என்பதை கண்டறிய முடியவில்லை, ஆனால் ஏற்கனவே ஒரு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் தூங்குவதால் மற்றொரு நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது என்பது தெரிய வந்துள்ளது" என்று கூறினார்.
இருதய நிபுணர் ஜோ விட்மோர் கூறுகையில், "போதிய தூக்கம் உங்கள் உடலை ஓய்வெடுக்க அனுமதிக்கிறது. தூக்கமின்மையால் ரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதய நோய் உள்ளிட்டவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இந்த ஆராய்ச்சி, ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இது அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஸ்னூஸ் பட்டனை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்? - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!