நியூ யார்க் : 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஆபாச பட நடிகைக்கு பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அதிபர் டிரம்ப் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகினார். கிரிமினல் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், முக்கிய நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 45 வது அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த டொனால்ட் டிரம்ப் மீது அபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். டொனால்டு டிரம்ப் தன்னுடன் சில ஆண்டுகள் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஸ்டார்மி குற்றஞ்சாட்டினார்.
ஸ்டார்மி டேனியல் கூறியது அப்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருவரும் ஒன்றாக இணைந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வேகமாக பரவின. அதேநேரம் இந்த குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து வந்தார். இதற்கு முன்னரும் பல்வேறு பெண்கள் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் புகார்களை கூறி வந்த நிலையில் அதையும் அவர் மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதிபர் தேர்தலின் போது இது பற்றி பேசாமல் இருக்க ஸ்டார்மி டேனியலுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுவும் அதிபர் தேர்தல் செலவுக்கான நிதியில் இருந்து அந்த பணம் ஸ்டார்மி டேனியலுக்கு வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
முன்னாள் அதிபர் டிரம்ப் குறித்த பெண்களின் பாலியல் புகார்களை நியூயார்க் மான்ஹாட்டன் அட்டார்னி விசாரணை நடத்தி வந்தது. நியூயார்க் மான்ஹாட்டன் அரசு வழக்கறிஞர் அலுவலத்தில் இருந்து வழக்கு தொடர்பான விவரங்கள் கசிந்த நிலையில், தான் கைது செய்யப்பட உள்ளதாக \் டிரம்ப் கூறி பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், நியூ யார்க்கில் உள்ள மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் டிரம்ப் சரணடைந்தார். புளோரிடாவில் இருந்து நியூ யார்க் வந்த டிரம்ப், அங்குள்ள தன் ட்ரம்ப் ஹவுஸ் வீட்டில் தங்கினார். தொடர்ந்து கார் மூலம் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேரில் சென்று ஆஜராகினர். முன்னதாக காரில் பயணித்து கொண்டு இருந்த டிரம்ப், தன் சமூக வலைதள பக்கத்தில், "விசித்திரமாக உள்ளது - அவர்கள் என்னை கைது செய்யப் போகிறார்கள்" என பதிவிட்டார்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் முன் குழுமியிருந்த தன் ஆதரவாளர்களை பார்த்து கையசத்த டிரம்ப், நீதிமன்றத்தில் உள் சென்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகினார். அங்கு அவர் மீதான 34 குற்றச்சாட்டுகள் குறித்து வாசிக்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக டிரம்ப் கூறினார்.
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதை தடுக்கும் முயற்சியில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க : ரயில் விபத்தை தவிர்த்த மூதாட்டி - கர்நாடகாவின் சிங்கப்பெண்!