லாஸ் ஏஞ்சல்ஸ்: இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்டப் படமான 'ஆர்ஆர்ஆர்', ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் நடிப்பில் உருவானது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்று பெற்றது. உலகளவில் பெரிதும் பேசப்பட்டது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் நட்பு குறித்து புனைவுக்கதையாக வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. பல்வேறு விருதுகளையும் குவித்துவருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு ஆர்ஆர்ஆர் திரைப்படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள 'Naatu Naatu' பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருது பெற்றிருந்தது. தற்போது மேலும் ஒரு விருதை பெற்றுள்ளது. அதாவது சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதையும், சிறந்த பாடலுக்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதையும் (நாட்டு நாட்டு பாடலுக்காக) பெற்றுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ராஜமௌலி விழா மேடையில் பேசுகையில், தனது வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்களின் பங்கு குறித்து விளக்கினார். அவரது தாய், அண்ணி, மனைவி, மகள் குறித்து உருக்கமாக பேசினார். அதாவது, “எனது தாய் கல்வியை தாண்டி, எனக்கு கதை புத்தகங்கள் படித்தல், படைப்பாற்றலை வளர்த்தல் போன்றவற்றை ஊக்குவித்தார். மற்றொறு தாயாக திகழ்ந்த எனது அண்ணி, என்னில் இருக்கும் சிறப்பினை வெளிப்படுத்தவும், செயல்படுத்தவும் ஊக்குவித்தார்” என்றார்.
ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த தனது மனைவி ரமா குறித்து பேசுகையில், “எனது மனைவி ரமா, எனது படத்திற்கு ஆடைவடிவமைப்பாளராக உள்ளார். அதைவிட எனது வாழ்க்கையிலும் சிறந்த வடிவமைப்பாளர் அவர் தான். அவர் இல்லை என்றால், நான் இந்த இடத்தில் இல்லை. எனது மகளின் சிரிப்பு, என வாழ்க்கையை ஒளிரவைக்க போதுமானதாக இருக்கும்” என்றார். தனது உறையை முடிப்பதற்க்கு முன், ஜெய்ஹிந்த் என்று உரக்க கூறினார்.