வூஹான்: உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் பரவி சுமார் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதே நவம்பர் மாதத்தில் தான் சீனாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 2019 நவம்பர் 17ஆம் தேதி முதல் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அன்று அந்த முதல் நோயாளிக்கும், அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கும், ஏன் சீனாவுக்கும் தெரியாது, இந்த வைரஸ் உலகளவில் லட்சக்கணக்கான உயிர்களை கொல்லப்போகிறது என்று.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து இந்த கொரோனா வைரஸ் பரவியதாக தெரிவிக்கப்பட்டது. எதன் மூலம் உருவானது? எந்த காரணிகள் வாயிலாக பரவுகிறது? என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? என்று மருத்துவர்கள் அறிவதற்குள் கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவ ஆரம்பித்தது. அதன் தோற்றத்தை கண்டறிய எலி, பாம்பு, வெளவால் என பல விலங்குகளின் மாதிரிகளை சோதனை செய்தனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
கோவிட்-19(Covid-19)
ஓரிரு மாதங்கள் கடந்த நிலையில், கொரோனா வைரஸ் சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது. 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சுமார் 43,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருந்தது.
இந்த தீவிரமாக பரவும் தீநுண்மிக்கு ஆளுக்கொரு பெயர் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, covid-19 என்று பெயர் வைத்தது உலக சுகாதார நிறுவனம். 2019ஆம் பரவத் தொடங்கிய coronavirus இதன் சுருக்கமாகத்தான் இந்த பெயர் வைக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகள்
கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தும்பல், இருமல், தொடுதல் என நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வழிகளில் கொரோனா பரவியதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதனால், முகக்கவசம் அணிவது, தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஊரங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டினுள் முடங்கினர். மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. ஆயிரக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கிற்கு பாதிப்புகள் சென்றன. நோயாளிகளை கையாள முடியாமல் மருத்துவமனைகள் திணறின. சீனா தற்காலிகமாக பெரிய மருத்துவமனையே கட்டியது. சீனாவில் நிலை உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியது.
உலக நாடுகளுக்கும் பரவிய கொரோனா
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமெடுத்து இயல்புநிலை பாதிக்கப்பட்டதால், அங்கிருந்த பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் தாயகம் திரும்ப ஆரம்பித்தனர். உலக நாடுகள் தங்களது மக்களை விமானம் மூலம் மீட்டு வந்தனர். அதன் வாயிலாக பிற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் என பெரும்பாலான நாடுகளுக்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில் தொடங்கி 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. நாடுகளுக்கு இடையே கப்பல், விமானப் போக்குவரத்து என அனைத்து பயணிகள் போக்குவரத்தும் முடங்கியது.
உலகளவில் லட்சங்களில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கோடிகளை தொட்டது. கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர். அனைத்து நாடுகளிலும் கரோனா பொது முடக்கம் அமலானது. உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கின. உலக நாடுகளின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றது.
சுமார் ஓராண்டுக்குப் பிறகு கொரோனா முதல் அலை முடிவுக்கு வந்தது. சீனா ஓரளவுக்கு மூச்சுவிடத் தொடங்கியிருந்தது. உலகம் முழுவதும் ஓரிரு மாதங்கள் பாதிப்புகள் குறைந்தன. பிறகு இரண்டாம் அலை தொடங்கியது. ஆனால், இரண்டாவது அலையைக் கையாள உலக நாடுகள் ஆயத்தமாகியிருந்தன. பலி எண்ணிக்கையை எப்படி குறைப்பது? அத்தியாவசிப் பொருட்களை எப்படி வழங்குவது? நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை எப்படி கையாள்வது? என அனைத்தையும் ஓரளவுக்கு தெரிந்து வைத்திருந்தன. இதனால், ஒரு சில நாடுகளில் மட்டுமே இரண்டாம் அலையில் தாக்கம் மோசமாக இருந்தது. அந்த நாடுகளில் ஒன்று இந்தியா.
இந்தியாவில் தாக்கம்
இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதிதான் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என அடுத்தடுத்து பரவ ஆரம்பித்தது. இதனால் மக்கள் பீதியில் இருந்தனர். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உச்சகட்ட உயிர் பயத்தில், உலக சுகாதார நிறுவனம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் படி அனைவரும் முகக்கவசம் அணிந்தும், வீட்டை விட்டு வெளியே வராமலும் இருந்தனர்.
முதல் அலையில், இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது கொரோனா வைரஸ். மகாராஷ்ட்ரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மோசமாக பாதிப்பட்டன. முதல் அலை 2020 டிசம்பர் மாதத்தில் குறையத் தொடங்கியது. பெருந்தொற்று முடிந்துவிடும் என அனைவரும் நினைத்த நிலையில், ஓரிரு மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் அலை தாக்கியது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டாவது அலை தொடங்கியது. முதல் அலையோடு ஒப்பிடுகையில் இரண்டாம் அலையில் வீரியம் சற்று அதிகமாகவே இருந்தது. பலி எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது. இரண்டாம் அலையில் தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சம் வரை பதிவானது.
இரண்டாம் அலையில் மற்றொரு பூகம்பாக இருந்தது "ஆக்சிஜன் தட்டுப்பாடு". டெல்லி, உத்தரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. கொரோனா பாதிப்பால் மட்டுமல்லாமல், ஆக்சிஜன் இல்லாமலும், படுக்கை இல்லாமலும் நோயாளிகள் பலியாகினர். மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் வரிசையில் நின்ற காட்சிகள் தற்போது நினைவில் வந்தாலும் நம்மை உருக்குலையச் செய்கின்றன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றவர்கள் ஆகினர். கொத்துக் கொத்தாக சடலங்கள் எரிக்கப்பட்டன. சடலங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள், கொரோனாவின் முகத்தை விட கோரமானது என்றுதான் கூற வேண்டும். பின்னர், ஜூன் மாத வாக்கில் பாதிப்புகள் குறையத் தொடங்கி, இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்தது.
தமிழ்நாட்டில் கொரோனா(Tamil Nadu Corona)
தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஜூன் மாதத்தில் பாதிப்புகள் உச்சத்தை தொட்டன. ஜூலையில் சுமார் 7,000 வரை தினசரி பாதிப்புகள் பதிவாகின. முதல் அலை படிப்படியாக குறைந்து 2021ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதி வாரத்தில் தினசரி பாதிப்பு சுமார் 400ஆக குறைந்தது. இரண்டாவது அலை உச்சமடைந்திருந்த நிலையில், 2021 மே மாத வாக்கில் தினசரி பாதிப்பு சுமார் 36,000 ஆக இருந்தது. இது 2021 டிசம்பர் இறுதி வாரத்தில் 600 ஆக குறைந்தது.
மூன்றாம் அலையில் 2022ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் சுமார் 30,700 பேருக்கு தொற்று ஏற்பட்டது. மூன்றாம் அலை ஓரிரு மாதங்களிலே வீரியம் குறைந்துவிட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதி வாரத்தில் தினசரி பாதிப்பு 400-க்கும் கீழ் குறைந்தது. பின்னர், தமிழ்நாடு ஜீரோ கொரோனா என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த 25ஆம் தேதி நிலவரப்படி, 29 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நேற்று (நவ.26) நிலவரப்படி, 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
உலகளவில் இதுவரை சுமார் 64 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 66 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி பாதிப்பு சுமார் 29,000 ஆக இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது.
இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 23ஆம் தேதி முதல் தினசரி பாதிப்பு 30,000ஐ கடந்து பதிவாகி வருகிறது. 23ஆம் தேதி 31,444 பேருக்கும், 24ஆம் தேதி 32,695 பேருக்கும், 26ஆம் தேதி 35,909 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் 25,000-க்கும் மேற்பட்டோருக்கு அறிகுறி இல்லாமலேயே தொற்று உறுதியானது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பெய்ஜிங், ஜின்ஜியாங், குவாங்ஜோ உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டால் கூட, அப்பகுதிக்கே ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகில் மீண்டும் எதிரொலிக்குமா கொரோனா பரவல்?
சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், இது உலக நாடுகளிலும் எதிரொலிக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் இப்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண நிலையால், உலக நாடுகள் சற்று கலக்கத்தில் உள்ளன. சீனாவின் கொரோனா பாதிப்பும், கொரோனா தாக்கத்தால் ஏற்படும் பிற பாதிப்புகளும் உலக நாடுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. கொரோனாவில் தாக்கத்தால் பாதிப்பிலிருந்து உலக பொருளாதாரம் மீண்டெழ ஆரம்பித்துள்ளது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஜீரோ கொரோனா பாதிப்பு என்ற நிலையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இயல்பு நிலையில் இருக்கும் இந்த சூழலில், மீண்டும் கொரோனா பரவத் தொடங்கினால், மற்றொரு பெருந்தொற்றை உலக நாடுகளால் சமாளிக்க முடியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இதையும் படிங்க: ஜி20 தலைமை பொறுப்பை உலக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி