அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்திற்கு நேரடி காரணமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் துறை அலுவலரான டெரெக் சாவின் மீது, பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது இரண்டாம் நிலை கொலை (திட்டமிடப்படாத கொலை) குற்றச்சாட்டாக மாற்றிமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, இந்தச் சம்பவத்தின்போது நிகழ்விடத்தில் இருந்த மூன்று காவல் துறை அலுவலர்கள் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக, அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத் தலைநகர் மினியாபொலிஸில், மே 25ஆம் தேதி 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறை அலுவலரின் பிடியில் இருந்தபோது, கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தார்.
இதன் காணொலி சமூக ஊடகங்களில் வெளியாகி, உலகளவில் போராட்டம் வெடிக்கக் காரணமாகயிருந்தது குறிப்பிடத்தக்கது.