பீஜிங்: சீனாவின் அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் 3-வது முறையாக சீன அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 3-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின்பிங் நாடாளுமன்றத்தின் ரகசிய காப்புரிமை எடுத்துக் கொண்டு அதிபராக நிலைப்படுத்திக் கொண்டார்.
இதன் மூலம் சீன அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் என்ற வரலாற்று சிறப்பை அதிபர் ஜி ஜின்பிங் பெற்றார். இதற்கு முன் சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவரான மாவோ சேதுங், தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபராக பதவி வகித்ததே உச்சபட்சமாக இருந்தது.
தற்போது அந்த சாதனையை முறியடித்து ஜி ஜின்பிங் புது வரலாறு படைத்து உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் நாட்டின் அதிபராக 3-வது முறையாக அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நாடாளுமன்றத்தில் சீன அதிபருக்கான தேர்தலின் போது அவையில் மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 952 உறுப்பினர்களும் ஜி ஜின்பிங்கிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் சீன ராணுவத்தின் தலைவராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஒட்டுமொத்த சீனாவையும் அதிபர் ஜி ஜின்பிங் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். சாதாரண குடும்ப பின்னணியில் பிறந்தவரான ஜி ஜின்பிங், தற்போது உலக வல்லரசுகளையே அச்சுறுத்தும் வகையில் பயங்கர எழுச்சி பெற்று உள்ளார். அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை பிராந்தியம் ரீதியாகவும், வெளிவட்டார ரீதியிலும் சீனா பல்வேறு எதிர்ப்புகளை சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் அவருக்கு எதிராக மக்கள் குரலும் தொடர்ந்து எழுந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் வரை சீனாவில் நிலவிய கரோனா ஜூரோ கொள்கையால் தொழிலதிபர்கள், அன்றாடம் பொது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததாக கூறி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினாலும், சீன அரசு போராட்டக்காரர்களை சத்தமில்லாமல் நசுக்கியதாக கூறப்படுகிறது.
அதேபோல் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தனக்கு இருந்த எதிர்ப்பாளர்களை ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட புகார்களை கூறி கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிபர் ஜி ஜின்பிங் மேற்கொண்டதாகவும், தனக்கு ஆதரவாளர்களை தேடித் தேடி முக்கிய பொறுப்புகளில் அமரச் செய்து ஆட்சியையும், கட்சியையும் ஜி ஜின்பிங் தன் வசம் ஆக்கிக் கொண்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இதையும் படிங்க: Germany shooting: தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; 7 பேர் பலி!