டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. வரும் மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கோவாவில் வைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மவோ நிங் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். மேலும் இந்த மாநாட்டில் சர்வதேச மற்றும் பிராந்திய நிலைமை, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, வணிகம், பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் சீன வெளியுறவு அமைச்சர் பேசுவார் என அநாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் இரண்டாவது முறையாக சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang இந்தியாவுக்கு வருகிறார். இதற்கு முன் இந்தியா தலைமையேற்று நடத்தும் மற்றொரு அமைப்பான ஜி20 மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் Qin Gang கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஷர்தாரியும் ஷாங்காய் ஒத்துழப்பு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புக்கருதி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் வருகை சந்தேகத்தில் இருந்த நிலையில், தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் இந்திய வருகைக்குப் பின்னர் இந்தியா வரும் முதலமைச்சர் பிலாவல் பூட்டோ ஷர்தாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டைத் தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang மியான்மருக்குச் செல்கிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மியான்மர் பயணத்திற்குப் பின் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம், பாதுகாப்பு, வணிகம், வர்த்தகம், டிஜிட்டல் சேவை உள்ளிட்ட இரு தரப்பு உறவுகளை புதுப்பிக்கும் வகையில் சீன வெளியுறவு அமைச்சரின் சுற்றுப்பயணம் இருக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பில் இந்தியா, ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் குடியரசு தலைவர்களால் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.
பிராந்திய ரீதியிலான பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கும் சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக இந்த ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டன.
இதையும் படிங்க : டெல்லி மதுபான முறைகேட்டு வழக்கில் தொடர்பா? ஆம் ஆத்மி எம்.பி. உடைத்த உண்மைகள்!