இலங்கை(காங்கேசன் துறைமுகம்): நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுகங்கள் இடையில் 'செரியாபாணி' என்ற பயணிகள் கப்பல் நாளை மறுநாள் அக்.10 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. முன்னதாக இதற்கான சோதனை ஓட்டம் இன்று (அக்.08) காலை நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இயக்கப்பட்டது.
இந்த கப்பல், இன்று (அக்.08) பிற்பகல் 1.15 மணியளவில் இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தை சென்றடைந்து, சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. முழுவதுமாக குளிரூட்டப்பட்டுள்ள இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டும் சோதனை பயணத்தின்போது சென்றதாக கூறப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தின் போது, கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, காலநிலை நிலவரம் கணக்கெடுக்கப்பட்டது.
செரியாபாணி பயணிகள் கப்பல் வெற்றிகரமாக காங்கேஷன் துறைமுகத்தை அடைந்ததையடுத்து, அதிகாரிகள் கப்பலை மலர் தூவி வரவேற்றனர். தொடர்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சுமார் அரை மணி நேரம் காங்கேசன் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் பிற்பகல் 1.45 மணியளவில் மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி கப்பல் புறப்பட்டது.
நாகப்பட்டினம் - இலங்கைக்கு இந்திய ரூபாயில் ஜி.எஸ்.டி வரிகள் உட்பட 7 ஆயிரத்து 670 ரூபாயும், இந்திய மதிப்பின் படி இலங்கையில் 27 ஆயிரம் ரூபாய், கப்பலின் பயணக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கப்பலில் பயணம் மேற்கொள்ள அதிகாரிகள் தரப்பில் இருந்து பயணிகளுக்கு சில வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது.
அதில், பயணிகள் அவர்களுடன் 50 கிலோ வரை எடையுள்ளப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மணி நேரத்தில் இலங்கைகும், இலங்கையில் இருந்து மீண்டும் தமிழ்நாட்டிற்கும் வர முடியும் என்பதால் வியாபாரிகள் மற்றும் பயணிகள் மத்தியில் செரியாபாணி பயணிகள் கப்பல் பெருமளவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீலகிரியில் 10 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? - தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை!