இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள மசூதியில் நேற்று நடந்த மாலை தொழுகையின் போது திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு வருடத்திற்கு பின் நடக்கும் முதல் தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளன.கடந்த வாரம், காபூலில் உள்ள மத மையத்தில் ஒரு முக்கிய தலிபான் மதகுருவைக் கொன்றதற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கொல்லப்பட்ட மதகுரு முல்லா அமீர் முகமது காபூலி எனவும் உறுதிபடுத்தப்பட்டது.
காபூல் காவல்துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், ‘30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறினார். காபூலில் உள்ள இத்தாலிய அவசர மருத்துவமனைக்கு வெடிகுண்டு வெடித்த இடத்திலிருந்து ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 27 காயமடைந்த பொதுமக்கள் கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு காபூலில் உள்ள ஒரு மசூதிக்குள் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது என்பது காவல்துறை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையையோ அல்லது சேதத்தையோ வழங்க ஆப்கான் அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் இடம் கொடுத்த முந்தைய தலிபான் அரசாங்கத்தை அமெரிக்க தலைமையிலான படையெடுப்பு வீழ்த்தியது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்காத சர்வதேச நாடுகள், அந்நாட்டுக்கான நிதியுதவியை முடக்கியதால், முன்னாள் கிளர்ச்சியாளர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5 இலங்கை வந்தடைந்தது