மதுரை: "என்னைப் போல இனி எந்தப் பெண்ணும் ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகக்கூடாது" என்ற வாசகங்களுடன் துவங்குகிறது நேபாள நாடாளுமன்றத்தில் அந்தப் பெண்ணின் உரை. நேபாளத்திலுள்ள மக்வன்பூர் மாவட்டம், ஹெட்டாடா பகுதியைச் சேர்ந்தவர், பிந்தபாசினி கன்சகர். சாதாரணப் பெண்ணாக தனது வாழ்நாளை கடத்தி வந்த பிந்தபாசினி தற்போது ஒரு மக்கள் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கக் காரணம் அவர் வாழ்வில் நடந்த மாபெரும் சோகமும், அதனை துணிச்சலுடன் எதிர்கொண்ட விதமும்தான்.
தனது 19வது வயதில் காதலுக்கு மறுப்புத் தெரிவித்ததற்காக தன்னுடைய ஃபேன்ஸி ஸ்டோரில் வைத்து, திலீப்ராஜ் கேசரி என்பவரால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகிறார். அழகான இளம் முகம் மொத்தமும் தீக்காயம், உயிர்தாளாத வலியால் துடித்த அவரை பெற்றோர் அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கிறார்கள்.
தொடர்ந்து நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூன்று கட்டமாக பிந்தாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இருப்பினும் அவரது முகத்தை முறையாக சரி செய்ய இயலவில்லை. தொடர்ந்து அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து மதுரையில் உள்ள தேவதாஸ் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தனர். தற்போது அவரின் முகம் கொஞ்சம், கொஞ்சமாக சீரடைந்து வருகிறது.
ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் பிந்தபாசினி தனக்கு ஏற்பட்ட பிரச்னையை சமூகப் பிரச்னையாக உணர்ந்த அவர், தனக்கு நேர்ந்த கொடுமைபோல் இனி வேறு எந்த பெண்ணிற்கும் நடந்துவிடக்கூடாது என முடிவு செய்தார். பெண்களுக்கு இழைக்கப்படும் அனைத்துக் கொடுமைகளுக்கும் எதிராகத் தன்னை ஒரு தீவிர செயற்பாட்டாளராக முன்னிறுத்தி வரும் பிந்தபாசினி, நேபாள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய சுதந்திரக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி நேபாள நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் முதன்முதலாக உரையாற்றினார். அப்போது தனக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்பிற்காக நன்றி தெரிவித்து உரையைத் தொடங்கிய அவர், இந்த அவையில் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் முதியோர்களுக்காகவும் பேச விரும்புகிறேன் எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2006ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நேபாள நாட்டில் மட்டும் தீக்காயங்கள் தொடர்பான விபத்துகளால் 50 ஆயிரத்திலிருந்து 60ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள் எனவும், ஆனால் இந்தப் பிரச்னை குறித்து நமது நாடாளுமன்றமோ, பிற மக்கள் அவைகளோ, ஊடகங்களோ பேசுவதே இல்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும், ஆசிட் வீச்சின் காரணமாக பாதிக்கப்பட்ட தனக்கு, அதன் வலிகளும், காயங்களும் எத்தனை துயரம் மிகுந்தவை என்பது நன்றாகவே தெரியும் என வேதனையுடன் குறிப்பிட்ட பிந்தபாசினி, தன்னைபோல் யாரும் கஷ்டப்படக்கூடாது எனவும் அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்வேன் எனவும் கூறினார்.
மேலும், நேபாள நாட்டின் நகர்ப்புறம் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் ஆசிட், பெட்ரோல், எரிவாயு சார்ந்த விபத்துகள் அதிகம் நடைபெறும் நிலையில், தீக்காய விபத்துகளையோ அக்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களையோ சரியான வகையில் பாதுகாப்பதற்கான அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதைக் குறிப்பிட்டார்.
மேலும், இதுபோன்ற விபத்துகளில் பெரும்பாலும் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்கின்ற நபர்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் எனவும்; அவர்களுக்கு சிகிச்சை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உரையில் கோரிக்கை விடுத்தார். மேலும் இதுகுறித்த போதுமான மருத்துவ விழிப்புணர்வுக் கல்வியும் இதுவரை வழங்கப்படாத நிலையில், இதற்கான செலவுகளை மேற்கொள்வதற்குப் போதுமான பொருளாதார வசதியும் பொதுமக்களிடம் இல்லை எனக்கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ’’ஆகையால் அவைத்தலைவர் அவர்களே’’ என நீண்ட பிந்தபாசினியின் குரல், இந்தக் கொடுமையான விசயத்திற்கு நாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் எனவும்; ஆகையால் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் காலத்திலேயே அதற்கான முயற்சியை நாம் தொடங்க வேண்டும் என்றும்; பாதிக்கப்படும் ஒவ்வொரு தீக்காயமுற்றோருக்கும் போதுமான சிகிச்சை அளிப்பதற்கான அடிப்படை மருத்துவக் கட்டமைப்பை நாம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறி தனது இதயத்தின் ஆழத்தில் இருந்து வரும் வார்த்தைகள் இவை எனக்கூறி உரையை முடித்தார்.
தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக உள்ள பிந்தாபாசினி, வாட்ஸ்அப் மூலமாக ஈடிவி பாரத்தின் மதுரை செய்தியாளர் சிவக்குமாருக்கு பேட்டி அளித்தார். அதில், நாடாளுமன்றத்தில் முதன் முதலாக பேசும்போது சற்று பதற்றமாகத்தான் இருந்தது எனவும், ஆனால் தனக்கு கிடைத்த இந்த நல் வாய்ப்பை என்னை போன்று கஷ்டப்படும் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் பயன்படுத்தியுள்ளேன் எனவும், அதன் காரணமாகவே, என்னுடைய ஒவ்வொரு சொல்லும் இதயத்தின் அடியாழத்திலிருந்து வெளிப்பட்டன என கூறியுள்ளார்.
நேபாள நாடாளுமன்றத்தில் நான் நிகழ்த்திய கன்னி உரையைக் கேட்டு அனைத்து உறுப்பினர்களும் மகிழ்ச்சியடைந்தனர் என கூறிய அவர், நேபாளத்தில் பல ஆண்டுகளாக ஆசிட் மற்றும் தீக்காயம் அடைந்தவர்களுக்காக ஆதரவு அளித்து உதவி வரும் உஜ்வல் பிக்ரம் தாபா என்பவருக்கு நன்றி தெரிவித்தார். அவர் அளிக்கும் ஊக்கத்தின் காரணமாக எங்களது செயல்திட்டத்தை நாடாளுமன்றத்தின் வாயிலாக ஒலித்தது மட்டுமன்றி, தொடர்ந்து ஒன்றிணைந்து நாங்கள் செயல்படுவதற்கும் இதன் மூலம் ஊக்கமும் உற்சாகமும் பெற்றுள்ளேன்' என்றார்.
2019ம் ஆண்டு மதுரையில் சிகிச்சையில் இருந்த போது ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் ஆடை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் எனக் கூறியிருந்தார், பிந்தாபாசினி. இவர் தற்போது மக்கள் பிரதிநிதியாக உலகம் வியந்து பார்க்கும் இடத்தில் உள்ளது பெருமை அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: கோவையில் பாஜக மீது சீறிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள்!