பெஷாவர் : பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பஜூர் கர் பகுதியில் ஜமியத் உலிமா இ இஸ்லாம் என்ற இஸ்லாமிய அரசியல் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இடையே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 200 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனைவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டு இருப்பதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்த இடத்தை சுற்றிவளைத்து யாரும் தப்பிக்காத வகையில் போலீசார் மற்றும் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஜமியத் உலிமா இ இஸ்லாம் கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பொதுக் கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேநேரம் வெடிகுண்டு தாக்குதலில் ஏறத்தாழ 35 பேர் வரை உயிரிழந்ததாகவும் 300க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் பரவி வருகிறது.
வெடிகுண்டு தாக்குதல் நடந்த இடத்தில் எடுக்கப்பட்டதாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தாக்குதல் தொடர்பாக போலியான வீடியோக்கள் மற்றும் செய்திகளை பகிரவோ, பரப்பவோ வேண்டாம் என அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தாக்குதல் நடத்தியது உள்ளூர் தீவிரவாத அமைப்புகளா அல்லது வேறேதும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் சதியா என விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்!