ஜாகர்தா: இந்தோனேசியா மற்றும் பாலி தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வுகளின் படி, ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் 7.1 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான போதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் பாலி கடலின் 181 கிலோ மீட்டர் வடகிழக்கே உள்ள லொம்போக் திவீல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தோனேசியா வானிலை அறிக்கையின் படி நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்த சக்திவாய்ந்த 7.1 நிலநடுக்கத்திற்கு பிறகு பாலி கடலில் மீண்டும் 5 புள்ளி 4 மற்றும் 5 புள்ளி 6 என்ற அளவுகோளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் இருந்து பதறியடித்து கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.
பின்னர் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்ற அறிவிப்பு வெளியான பின்னர் நிலைமை சீரானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு ஜாவா, மத்திய ஜாவா, நுசா டென்குரா மேற்கு பகுதி ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. கராங்கேசம் மலைப்பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டன.
இதனால் மூன்று கிராமங்களில் ஏற்பட்ட பலத்த சேதத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஜாவா பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 33 பேர் உயிரிழந்தனர். மேலும் 600 பேர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் 2018க்கு பிறகு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது.
இதே போல் கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்தோனேசியா பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. தொடர் எரிமலை சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுக்கு சில சென்டி மீட்டர் என அளவில் இந்தோனேசியா நகரம் நீருக்குள் மூழ்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: Neeraj Chopra : ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம்.. 40 ஆண்டுகால சாதனை முறியடிப்பு!