பாகிஸ்தான்: சையத் பாசித் அலி என்ற பாகிஸ்தான் யூடியூபர், பாகிஸ்தானில் உள்ள தனித்துவமான காதல் கதைகளை தனது யூடியூபில் பகிர்ந்து வருகிறார். தனித்துவமான காதல் ஜோடிகளிடம் பேட்டி கண்டு, அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 வயது இளம்பெண், 55 வயது நபரை திருமணம் செய்த கதையை வீடியோவாக போட்டிருந்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மற்றொரு வித்தியாசமான காதல் கதையை வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதில், 19 வயது இளம்பெண்ணும், 70 வயது தாத்தா ஒருவரும் மணமுடித்த கதையைப் பதிவிட்டிருந்தார்.
இந்த காதல் தம்பதியின் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த தம்பதி லியாகத் அலி (70) மற்றும் ஷுமைலா அலி(19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லாகூரில் தினமும் காலையில் நடைப்பயிற்சிக்கு சென்றபோதுதான், தனது மனைவி ஷுமைலாவை சந்தித்ததாகவும், ஷுமைலாவுக்குப் பின்னால் சென்றபோது தான் ஒரு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தபோதுதான் தங்களது காதல் தொடங்கியது என்றும் லியாகத் அலி தெரிவித்தார்.
இதுகுறித்து ஷுமைலா கூறுகையில், "காதல் வயதைப் பார்ப்பதில்லை. அது தானாக நடக்கும். வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்து கொள்பவர்களை மக்கள் விமர்சிக்கக் கூடாது. அவர்களது முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவரவர்களின் வாழ்க்கையை அவர்கள் விரும்பியபடி வாழ உரிமை உள்ளது. எனது பெற்றோர் சிறிது காலம் எங்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், எங்களால் அவர்களை சமாதானப்படுத்த முடிந்தது" என்றார்.
70 வயதாக இருந்தாலும், தான் மனதளவில் மிகவும் இளமையாக இருப்பதாகவும், காதலில் வயது ஒரு விஷயம் அல்ல என்றும் லியாகத் அலி கூறினார். தனது மனைவியின் சமையலில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், உணவகங்களில் சாப்பிடுவதை இப்போது விட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
வயது வித்தியாசம் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று கேட்டபோது, ஒருவரது வயது என்ன என்பது இங்கு கேள்வி இல்லை, சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.
மோசமான ஒரு உறவில் மாட்டிக்கொள்வதை விட, ஒரு நல்ல நபரை தேர்வு செய்வது முக்கியம் என்றும், வயது வித்தியாசத்தை விட, தனிப்பட்ட கண்ணியமும், மரியாதையும்தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஷுமைலா தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஹிஜாப் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச் சூடு!. 5 பேர் உயிரிழப்பு