டெல்லி: கார்ட்டூன் உலகின் கதாபாத்திரங்களை வடிவமைத்து உலக அளவில் பெரும் புகழைச் சேர்த்து என் வழி தனி வழி என்ற பாணியில் இன்றும் வெற்றி நடை போட்டு வருகிறது டிஸ்னி நிறுவனம். 20ஆம் நூற்றாண்டின் கேளிக்கை உலகில் கார்ட்டூன் வாயிலாகச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஈர்க்கப்பட்டனர்.
இதற்குப் பின்னால் இருக்கும் அந்த கதாபாத்திரம்தான் மிக்கி மவுஸ் முதல் டிஸ்னிலேண்ட் வரை கடந்து வந்த 100 ஆண்டுகளின் சாதனையாளர் வால்ட் டிஸ்னி. இந்த டிஸ்னி பொழுது போக்கு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதை உலகளாவிய கொண்டாட்டமாக எடுத்துச் செல்கிறது அந்நிறுவனம்.
இந்நிலையில், உலகம் முழுவதும் 100 புதிய படைப்புகளின் கொண்டாட்டம் மற்றும் நோய்வாய்ப்பட்டு உள்ள குழந்தைகளின் மருத்துவச் சிகிச்சைக்கு 1 மில்லியன் டாலர் வழங்கும் வகையிலான make a wish பிரச்சாரத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது என, அந்நிறுவனத்தின் நுகர்வோர் தயாரிப்புகள், விளையாட்டு மற்றும் வெளியீட்டுத்துறைத் தலைவர் டாசியா பிலிப்படோஸ் கூறியுள்ளார்.
மேலும், டிஸ்னியின் 100வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகின் புகழ்பெற்ற தொலைநோக்கு பார்வையாளர்கள், ஃபேஷன், இசை, கலை மற்றும் அடுத்த தலைமுறையின் திறமைசாலிகள் பலர் தங்களது படைப்புகள் மூலமாக கிடைக்கப்பெறும் அனைத்து பலன்களையும் make a wish பிரச்சாரத்திற்கு நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இது குறித்துப் பேசியுள்ள இந்தியாவின் தலைசிறந்த ஆடை மற்றும் நகைகள் வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி, தனது சிறு வயதில் தான் மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், டிஸ்னி உருவாக்கிய அற்புதமான சாகச உலகம் தனது கற்பனை உலகை வடிவமைத்ததாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி, டிஸ்னி கொண்டாட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தனக்குப் பங்களிப்பு வழங்கியது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் சப்யசாச்சி முகர்ஜி தெரிவித்து உள்ளார்.
உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி, இவர் கடந்த 20ஆம் நூற்றாண்டில் கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் உலகில் தனக்கான முத்திரை பதித்தார். கார்ட்டூன் கதாபாத்திரங்களைத் தொடர்ந்து இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். பல சாதனையாளர்களின் உலகம் செய்தித்தாள் போடும் சிறுவன் கதையில் தொடங்கி இருப்பதை வரலாறுகள் பதிவு செய்திருக்கின்றன.
அந்த வகையில் தனது சிறுவயதில் ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தாலும் குடும்பச் சூழல் காரணமாக செய்தித்தாள் விற்று தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இன்று வரலாற்றுச் சாதனையாகக் கேளிக்கை உலகில் டிஸ்னி எனும் பிரமாண்ட நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் 100வது ஆண்டு விழா கொண்டாட்டம் நோய்வாய்ப்பட்டு உள்ள குழந்தைகளின் மருத்துவச் சிகிச்சைக்கு 1 மில்லியன் டாலர் வழங்கும் make a wish பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது அனைவராலும் ஈர்க்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: Marilyn Monroe: காலம் தாண்டி நிற்கும் கனவுக்கன்னி "மர்லின் மன்றோ"... பேரழகும், பெரும் புதிர்களும்...!