ஈரானைச் சேர்ந்தவர் முகமது ஹசன் ரெஸாய். கடந்த 2007ஆம் ஆண்டில் கொலை குற்றச்சாட்டில் ஈரான் காவல்துறையினரால் ரெஸாய் கைது செய்யப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை டிசம்பர் 31ஆம் தேதி அந்நாட்டு அரசு தூக்கிலிட்டது.
17 வயதில் சிறாராக கைது செய்யப்பட்டவரை கடந்த 12 ஆண்டுகள் சிறையில் அடைத்து சித்ரவதை செய்து தூக்கு தண்டனைக்கு உட்படுத்தியது பன்னாட்டு மனித உரிமைக்கு எதிரானது என ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மைக்கேல் பேச்லெட், “2007ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலையில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டி 17 வயதில் முகமது ஹசன் ரெஸாயை ஈரான் அரசு கைது செய்தது. இதனையடுத்து, அவரை அடித்து துன்புறுத்தி செய்யாத குற்றத்தை செய்ததாக ரெஸாயிடம் கட்டாய வாக்குமூலம் பெற்று, அதை வைத்து அவரைக் குற்றவாளியாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
குற்றத்தின் போது சிறாராக இருந்த ஒருவருக்கு மரண தண்டனையை விதிப்பது சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கடுமையான மீறலாகும். சிறார்கள் செய்த குற்றங்களுக்கு மரண தண்டனையைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஐ.நா சபை தடைசெய்துள்ளது. இருப்பினும், மிகவும் நியாயமற்ற முறையில் விசாரணை நடத்தி, அதனை முன்னிறுத்தி ரெஸாயின் மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டத்தை ‘குழந்தைகளின் உரிமைகள் மீதான வெறுக்கத்தக்க தாக்குதல்’ என்று தான் அழைக்க வேண்டும். ஈரானின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையரகத்தின் அறிக்கையின்படி, இந்தாண்டு மட்டும் மூன்று சிறார் குற்றவாளிகள் ஈரான் அரசால் தூக்கிலிடப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 80 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஈரானிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : இம்ரான் அரசுக்கு எதிராக நடத்தப்படவுள்ள அடுத்தகட்டப் போராட்டங்கள் குறித்து கலந்து ஆலோசனை நடத்திய எதிர்க்கட்சிகள்!