ஆசிய நாடுகளுடன் ஐரோப்பா உள்ளிட்ட மற்ற மேற்கத்திய நாடுகளை இணைக்கும் போக்குவரத்து மையப்புள்ளியாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது.
அந்த வகையில் துபாயிலுள்ள சர்வதேச விமான நிலையம் உலக சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி ஆகும்.
ஆசியப் பயணிகள் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை காண, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இணைப்பு விமானத்தை பயன்படுத்துவார்கள்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அவசர நிலையில் விமானங்கள் இயக்கப்படும் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே சவுதி அரேபியா உள்ளிட்ட ஏழு வளைகுடா நாடுகளும் விமான சேவைக்கு தடை விதித்துள்ளன. ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் மாலை நேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
தற்போது சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அமீரக அலுவலர் ஒருவர் கூறுகையில், “கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமீரகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மளிகைக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் மொத்த உணவுப் பொருட்கள் கடைகள் திறந்திருக்கும்” என்றார்.
வளைகுடா நாடுகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், கடற்கரை, பள்ளிவாசல்கள் மற்றும் பொதுமக்கள் கூடுகிற இதர இடங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.