இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக ஜெருசலேமில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டின் முன்பு கடும் பனியை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஊழல் புகாரில் சிக்கிய அவர் பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
அதேபோல், சீசரியாவில் உள்ள அவரது வீட்டின் முன்பும் இஸ்ரேல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஆறு மாத காலமாக, மக்கள் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். இருப்பினும், சமீப காலத்தில் போராட்டத்தின் வீரியம் குறைந்துள்ளது. அங்கு குளிர்காலம் தொடங்கியுள்ளதால் போராட்டத்தை நடத்துபவர்களுக்கு மக்களை கூட்டுவது பெரும் சவாலாக மாறியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலின் பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. கரோனா சூழலை நெதன்யாகு மிக மோசமாக கையாண்டதாகவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாலும் அவர் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரோனா காரணமாக பொருளாதாரம் பாதிப்படைந்து வேலையின்மை அதிகரித்துள்ளது. போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.