அமெரிக்காவால் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உள்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். சுலைமானியின் இறுதி ஊர்வலம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்றது.
அதன்படி, காசிம் சுலைமானியின் சொந்த ஊரான கெர்மனிலும் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர், மேலும் 48 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிவரும் வீடியோவில் சிலர் சாலையில் அசைவற்றுக்கிடப்பது போலவும், அவர்களுக்கு உதவமாறு அருகிலுள்ளவர்கள் அழைப்பது போலவும் உள்ளது. இந்தக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் ஈரான் அரசு சார்பில் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரான் அவசர மருத்துவ சேவைத் தலைவர் ப்ரஹோசின் கவுளிகன்ட் கூறுகையில், "இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிலர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்" என்று இச்சம்பவத்தை உறுதிபடுத்தியுள்ளார்.
ஈரான் தலைநகரான டெஹ்ரானில் சுலைமானிக்கு நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சுமார் 1 மில்லியன் மக்கள் பங்கேற்றனர். அப்போது அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களையும் ஈரான் மக்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாதிகளாக அறிவித்த ஈரான்!