இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே நீண்ட நாள்களாக மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், அங்குள்ள டமாஸ்கஸ் நகரில் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளது. அங்குள்ள டெம்பிள் மௌன்ட் புனித தலத்தில் ரம்லான் மாத தொழுகைக்கு பாலஸ்தீனர்கள் 90 ஆயிரம் பேர் குழுமியுள்ளனர்.
அப்போது சிலர் இஸ்ரேல் அரசுக்கு எதிராகவும் ஹமாஸ் பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
மேலும், குழுவில் இருந்த இரு பாலஸ்தினியர்கள் இஸ்ரேல் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வெடித்த மோதலில் டெம்பிள் மௌன்ட் பகுதியே கலவர பூமியாகக் காட்சியளித்தது. இதில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தினியர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதில் 14 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு நாட்டு எல்லையான காசா பகுதியில் ஏற்படும் மோதலில் தொடர்ச்சியாக வான்வெளி தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக எல்லைப் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் நீண்ட காலமாக அமைதியிழந்து வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.