துபாய்: சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லூஜெயின் அல் ஹத்லவுலுக்கு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இணையத்தை பயன்படுத்தி, மாற்றம் வேண்டுமெனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் லூஜெயின் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.
இந்நிலையில், அவர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லூஜெயின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, 5 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ய லூஜெயினுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கடலில் மூழ்கிய ரஷ்ய படகு - 17 பேர் மாயம்