சவுதி மன்னர் சல்மானும் அவரது மகனும் வாரிசுமான இளவரசர் முகமது பின் சல்மானும் சவுதி அரேபியாவில் பல்வேறு முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். கச்சா எண்ணெய்யைத் தவிர மற்ற வருமானங்களையும் பெருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துவருகின்றன.
இருப்பினும் அந்நாட்டில் பொது இடங்களில் கசையடி உள்ளிட்ட தண்டனைகளை வழங்குவது குற்றம்புரியும் சிறார்களுக்கும் மரண தண்டனை அளிப்பது போன்ற இஸ்லாமியச் சட்டங்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுவதால் சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அந்நாடுகளில் முதலீடு செய்ய தயக்கம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டில் சிறார்களுக்கு இனிமேல் மரண தண்டனைகளும் கசையடி தண்டனைகளும் விதிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாகச் சிறைத் தண்டனை, கட்டாய சமூக சேவை ஆற்றுவது உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறையிலிருந்தால் போதும் என்றும் அதன்பின் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் சிறார்களின் வழக்குகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ராணுவ செலவு: 3ஆம் இடத்தில் இந்தியா!