சவுதி அரசின் அரம்கோ எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு முக்கிய எண்ணெய் ஆலைகள் மீது கடந்த சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து, சவுதி அரசு அதனுடைய கச்சா எண்ணெய் உற்பத்தியில் 50 சதவீதத்தை (அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 50 லட்சம் பீப்பாய்) குறைத்ததுள்ளது. இதன் எதிரொலியாக உலகளவில் எண்ணெய் விலை பன்மடங்கு உயர்ச்சி கண்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆனால், இதற்கு ஈரான் நாடே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு ஈரான்-அமெரிக்கா மோதலை வலுப்படுத்தியுள்ளது. இருநாடுகளுக்குமிடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதல் குறித்து நேற்று (உள்ளூர் நேரப்படி) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, சவுதியில் நடந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "தற்போதுள்ள சூழலில் அப்படிதான் நினைக்கிறேன். ஆனால், ஈரான் நாட்டுடன் அமெரிக்கா போரிடத் தயாராக இல்லை" என்றார்.
முன்னதாக, சவுதி எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியது யார் என அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தினால் அதுகுறித்து உரிய நடவடிக்கையை எடுக்கத் தயாராக உள்ளோம் என அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்தியிருந்தார்.