இஸ்ரேல் நாட்டில் 12 ஆண்டு காலம் ஆட்சி நடத்திவந்த பெஞ்சமின் நெதன்யாகு அரசு, நேற்றுடன் (ஜூன் 13) முடிவுக்கு வந்தது.
அவருக்கு எதிராக யாரும் எதிர்பாராத வகையில் வலதுசாரி கூட்டணியுடன், அரபு கட்சிகள் கூட்டணி வைத்து புதிய கூட்டணி அரசை நிறுவியுள்ளன. இந்தக் கூட்டணியின் பிரதமராக வலதுசாரி தேசியவாதியான நஃப்டாலி பென்னட் பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மரியாதைக்குரிய நஃப்டாலி பென்னட், இஸ்ரேலின் பிரதமர் ஆனதற்கு எனது வாழ்த்துகள்.
அடுத்த ஆண்டு தூதரக உறவுகள் மேம்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளை நாம் கொண்டாடும் சமயத்தில், நான் தங்களைச் சந்திக்கவும், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை ஆழப்படுத்தவும் எதிர்நோக்கியிருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.