கொரிய தீபகற்பத்தில் கடந்த 1950-53ஆம் ஆண்டு வரை, போர் நடந்தபோது, தென் கொரியா, வடகொரியா நாட்டினர் எல்லையில் பலூன்களில் துண்டு பிரசுரங்களை அனுப்பியும் புதுவிதமாக சண்டையிட்டனர். இந்தப் புதுவித சண்டையானது மக்களின் மனதைப் பாதித்து, உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது. இது, கொரிய நாடுகளின் பாரம்பரிய சண்டையாக இருந்து வருகிறது. இதற்கிடையே, பரம எதிரிகளாக இருந்த வடகொரியாவும், தென்கொரியாவும் சில ஆண்டுகளுக்கு முன் நட்பாகின. பின்னர், இனி துண்டு பிரசுர சண்டையில் ஈடுபட வேண்டாம் என 2018ஆம் ஆண்டு ஒப்பந்தமும் செய்து கொண்டன.
இந்நிலையில், வடகொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு தப்பிச் சென்ற சிலர், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை விமர்சித்து, தென்கொரியா எல்லையில் கடந்த மே மாத இறுதியில் துண்டு பிரசுர பலூன்களைப் பறக்க விட்டனர். 5 லட்சம் துண்டு பிரசுரங்கள் பறந்து வந்ததால் ஆத்திரமடைந்த வடகொரியா, சில நாட்களுக்கு முன்பு, தனது எல்லையில் உள்ள தென்கொரிய தகவல் தொடர்பு அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்தது. அதோடு, 2018ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. தென்கொரியாவுக்குப் பதிலடி தர வேண்டிய நேரம் வந்தாகி விட்டதாகவும் அறிவித்தது.
தற்போது, வடகொரியாவில் தென்கொரியாவுக்கு எதிராக 1.2 கோடி துண்டு பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை 3000 பலூன்களில் கட்டி அனுப்பும் முடிவில் வடகொரியா உறுதியாக உள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் உளவியல் மோதல் உருவாகும் நிலை ஏற்படலாம் என்றும், வடகொரியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் தென்கொரியா வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'தேசியவாத காங்கிரஸார் கூட்டணிக்காக தேடிவந்தார்கள்'- பட்னாவிஸ்