உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. தினந்தோறும் மூன்று லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், நியூசிலாந்து நாட்டில் மட்டும் கரோனா தொற்று எளிதாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கரோனா தொற்று இல்லாத முதல் நாடு எனவும் அறிவித்தனர். இந்நிலையில், சுமார் 102 நாள்களாக தலைக்காட்டாமல் இருந்த கரோனா தொற்று நியூசிலாந்தில் தென்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 49 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி நடக்கவிருந்த பொது தேர்தலை அக்டோபர் 17ஆம் தேதிக்கு மாற்றுவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இன்னும் சில காலம் கரோனா நம்முடன் இருக்கும். அதற்காக தேர்தலை தொடர்ந்து தள்ளி வைப்பது நோய் பரவலின் அபாயத்தை குறைக்காது. தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், தேர்தல் மேலும் தள்ளிப் போகும் நிலை ஏற்படாது" எனத் தெரிவித்தார்.